கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் திரைப்படங்கள் வெளியாகி நூறு நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதனால் ஏராளமான படங்களை தேக்கமடைந்து தயாரிப்பாளர்கள் சிக்கலில் உள்ளனர். சினிமா தொடர்பான எவ்வித வேலைகளும் செய்ய முடியாததால், எதிர்காலத்தில் தயாரிப்புத் தொழிலை மேற்கொள்வதில் பலரும் சிரமம் அடைந்துள்ளனர்.
இந்தச் சூழலைக் கையாள மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக முன்னதாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ''மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் உட்பட அனைத்து நடிகர்களும் தங்களது சம்பளத்தை பாதியாகக் குறைக்க வேண்டும். இல்லையென்றால் தயாரிப்புத் தொழிலில் இனி ஈடுபட மாட்டோம். இந்த விவகாரம் தொடர்பாக மலையாள நடிகர்கள் சங்கமான ஏ.எம்.எம்.ஏ உடன் ஆலோசனை நடத்தவுள்ளோம்'' எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கொச்சியில் ஏ.எம்.எம்.ஏ நிர்வாகிகள் தரப்பில் நடிகர்களின் சம்பளக் குறைப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ''கரோனா சூழலால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் அனைவரும் தங்களது சம்பளத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் பேச உள்ளோம்'' எனத் தெரிவித்தனர்.
கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட சக்காரபெரம்பில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதால், கேரள இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் ஆலோசனைக் கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது.
இதையும் படிங்க: ஆறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெளியாகும் 'ஜில்லா'