விவேக் மறைவு குறித்து நடிகர் சிம்பு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "அன்பு அண்ணன் நம் சின்னக் கலைவாணர் இன்முகன் மாறாத மனிதர். எல்லோரிடமும் இயல்பாகப் பழகுபவர், கணக்கற்ற மரக்கன்றுகளை நட்டு காற்றுக்கு ஆக்சிஜனை சுவாசிக்கக் கற்றுக் கொடுத்தவர், இன்று மூச்சற்றுவிட்டார் என்ற பெருந்துயரச் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்.
சைக்கிளிங், உடற்பயிற்சி, யோகா, இசை என மிக ஆரேக்கியமாக வாழ்ந்தவர் . சிறந்த பண்பாளரை இவ்வளவு சீக்கிரம் இழப்போமென்று கனவிலும் நினைத்ததில்லை. தமிழ் சினிமாவில் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பகுத்தறிவு கருத்துகளை போதித்து வந்தார். மரங்களை நடுங்கள் என அய்யா அப்துல் கலாம் காட்டிய வழியை, இளைஞர்கள் மத்தியில் விரைவாக கொண்டு சென்று செயல்படுத்திய செயல் வீரர்.
பத்மஸ்ரீ விருதுக்குப் பொருத்தமானவராக நிறைந்திருந்தார். அவர் மறைந்தாலும் அவர் செய்துள்ளள செயல்கள் அவரை என்றும் நகைச்சுவை நடிகராக, கருத்தாழம் மிக்க மனிதராக நிலைத்திருக்க வைக்கும். நம்மிடையே நிலைத்திருப்பார்.
என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர். எப்போதும் என் நல்லது, எடுக்கும் முயற்சிகள் பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு நாம் செய்ய வேண்டியது, அவர் செய்து வந்ததை நாம் தொடர்ந்து செய்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.
நான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுவைக்க இருக்கிறேன். சின்னக் கலைவாணரை நேசிக்கும் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரு மரக்கன்று நட்டு அவரது இதயதுக்கு நெருக்கமான அஞ்சலியை செலுத்துவோம் என அன்போடு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதய அஞ்சலிகள் விவேக் சார்" என குறிப்பிட்டுள்ளார்.