'காடன்' படத்தின் படப்பிடிப்பின்போது யானையுடன் நடிப்பது தனக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்தியதாக நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'. இப்படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் பிரபு சாலமன், ராணா டகுபதி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகிறது.
இந்த விழாவில் விஷ்ணு விஷால் பேசுகையில், ”காடன் படப்பிடிப்பின்போது எனக்கு அடிபட்டது. அந்த அடிதான் உடலுக்கும் மனதுக்கும் மாற்றத்தைக் கொடுத்தது. பிரபு சாலமன் தனி நபராக இருந்து இந்தப் படத்திற்காக உழைத்துள்ளார். நான் கடினமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். காடு, இயற்கை என்றாலே எனக்குப் பயம். படப்பிடிப்பில் யானையுடன் நடக்கும்போது பயமாக இருந்தது. ஒரு காட்சியில் யானை மீது ஓடி ஏறுவது போன்று அமைக்கப்பட்டு இருந்தது. அந்தக் காட்சியை கிட்டத்தட்ட 17 முறை ரீடேக் வாங்கி நடித்தேன்.
அன்புக்கு உலகில் மொழி வேறுபாடு இல்லை. யானையைப் பிரியும்போது வருத்தமாக இருந்தது. இந்தப் படம் இயற்கையான படைப்பு. ஒவ்வொரு படத்திற்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். இந்தப் படத்திற்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. அமேசான் காட்டுத் தீ, ஆஸ்திரேலிய காட்டுத் தீ, வானிலை மாற்றம் போன்ற பல செய்திகளைச் சமீபத்தில் பார்த்திருப்போம். அது போன்ற பிரச்சினையை கூறும் படம்தான் காடன். இந்தப் படம் உலக சினிமாவின் அரங்குக்குச் சென்றுசேர வேண்டும். எனக்குத் தெலுங்கு தெரியாது. ஆனால் இப்படத்திற்காக முதன் முதலாக தெலுங்கு பேசியுள்ளேன்” என்றார்.