சென்னையில் செயல்படும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் சினிமாத் தயாரிப்பு, திரைப்பட வினியோகம், திரைப்படங்களுக்கு ஃபைனான்ஸ் அளிப்பது, கால்சென்டர் உள்ளிட்ட தொழில்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள ஏ.ஜி.எஸ் கல்பாத்தி அகோரம் வீடு, திருமலைப்பிள்ளை தெருவில் உள்ள ஏ.ஜி.எஸ் அலுவலகம் ஆகிய இடங்களிலும், பிகில் உள்பட பிரபல திரைப்படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்த ஃபைனான்சியர் அன்புச்செழியனின் ஜி.என்.செட்டி சாலை வீடு, மதுரை வீடு உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வில்லிவாக்கம், தியாகராய நகர், நாவலூர், மதுரவாயல், உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஏ.ஜி.எஸ் திரையரங்குகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் வெளியான 'பிகில்' படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது, இதற்காக அன்புசெழியன் பைனான்ஸ் செய்துள்ளார். இந்த படத்திற்கு நடிகர் விஜய் சம்பளம் வாங்கியது தொடர்பாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து நேற்று நெய்வேலியில் நடைபெற்று வந்த 'மாஸ்டர்' படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் விஜய்யை சென்னை பனையூர் வீட்டிற்கு அழைத்து வந்த வருமான வரித்துறையினர் விஜய்யின் சாலிகிராமம் வங்கி கிளையில் பெறப்பட்ட கணக்கு புத்தகம், வங்கி தொடர்பான ஆவணங்கள், கல்பாத்தி அகோரம் வீட்டிலிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்து இரவு தொடங்கி தற்போது வரை விசாரணையை மேற்கொண்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நடிகர் விஜய் அலைபேசியை பயன்படுத்தவோ, வீட்டிலிருந்து வெளியே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சோதனையில் இதுவரை அன்புச்செழியனின் சென்னை வீட்டில் ரூ. 50 கோடி மற்றும் அவரது மதுரை வீட்டில் ரூ. 15 கோடி என மொத்தம் 65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் விஜய் வீட்டில் 2ஆவது நாளாக தொடரும் ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல்!