நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில், தமிழில் கடைசியாக வெளியான 'கொலைகாரன்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் 'தமிழரசன்', 'அக்னி சிறகுகள்', 'காக்கி' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு அவரது பிறந்தநாளான ஜூலை 24ஆம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்படத்தை விஜய் ஆண்டனியின் பிக்சர்ஸ் பி லிட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஜய் ஆண்டனி கூறுகையில், அடுத்த ஆண்டு(2021) திரையுலகிற்கு அற்புதமான ஆண்டாக அமையப் போகிறது. நேர் மறையான கருத்துக்களையே என் படங்களில் எப்போதும் நான் வலியுறுத்துவது வழக்கம்.
இந்தப் படமும் அப்படியே அமைந்திருக்கும். படத்தை இயக்குவது குறித்து மிகச் சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். மேலும் படத்தின் விவரங்கள் தெரிந்துகொள்ளச் சற்று காத்திருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வரும் ஜூலை 24ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.