இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, சுமன் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் 'வாட்ச்மேன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதில், கலந்துக் கொண்டு பேசிய நடிகர் சுமன்,
'ஹைதராபாத் அருகில் எனக்கு 175 ஏக்கர் நிலம் உள்ளது. அதை கார்கில் போரில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களின் குடும்பத்துக்கு கொடுக்கலாம் என்று எனது மனைவி கூறினார். நானும் அந்த முடிவை வரவேற்றேன்.
இருப்பினும் என் மனதில் சிறிய வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. நான் கஷ்டப்பட்டு வாங்கிய அந்த இடத்தில் ஒரு ஸ்டுடியோ அமைக்க வேண்டும் என்று கனவோடு இருந்தேன். அதன்பின் நாம் உயிரோடு இருப்பதற்கு நாட்டின் எல்லையில் எந்தவித வசதியும் இல்லாமல் கடுமையான சூழ்நிலையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்புப்படை வீரர்கள் நாட்டை பாதுகாத்துவருகின்றனர்.
நாட்டின் உண்மையான நாயகர்கள் அவர்கள்தான். நாம் அனைவரும் நிம்மதியாக வாழ்வதற்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்கிறார்கள். இதை உணர்ந்ததும் நான் முழுமனதோடு எனது 170 ஏக்கர் நிலத்தை கார்கில் போரில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு அளிக்க முன்வந்தேன்.
இதேபோன்று ஒவ்வொரு நிறுவனமும் உதவி செய்ய வேண்டும். சாதி, மதம், இனம் வேறுபாடு இல்லாமல் எல்லையில் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால் நாம் நாட்டுக்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டு, சாதி, மதம், இனம் என்று வேறுபடுத்திக் கொண்டிருக்கிறோம்' எனக் கூறினார்.