சென்னை: நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான 'அன்பானவன், அடங்காதவன், அசராதவன்' படத்தில், சிம்பு முழுமையாக நடித்துக் கொடுக்கவில்லை என தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, அந்த புகாரை விசாரித்த அன்றைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், மைக்கேல் ராயப்பனுக்கு 7 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக சிம்பு கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
ரெட் கார்டு
இதனை எதிர்த்து நடிகர் சிம்பு நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்நிலையில், சிம்பு தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுத்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக, சென்னை அண்ணா சாலை உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள், சிம்பு தரப்பில் அவரின் தாயார் உஷா ராஜேந்தர், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் இன்று (ஆக. 21) முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வளர்ச்சி பிடிக்கவில்லை
இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர், "சிம்புவின் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாமல், சிலர் அவரது படங்களை தடை செய்ய நினைக்கின்றனர்.
சிம்பு - மைக்கேல் ராயப்பன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்து கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடாது. திட்டமிட்டது போல 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: சட்டையில்லாமல் சிம்பு; வைரலாகும் கட்டுடல் புகைப்படம்!