’வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்திற்குப் பிறகு சிம்பு தற்போது ’மாநாடு’ படத்தில் நடிக்கிறார். பல்வேறு பிரச்னைகள் காரணமாகத் தள்ளிப்போன இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதற்கிடையில் சிம்பு பெரம்பலூரில் உள்ள பிரபல கல்லூரி விழாவுக்கு விருந்தினராகச் சென்றுள்ளார். அந்நிகழ்ச்சியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் சிம்பு பேசியதாவது, ''என் தமிழ் மண்ணுக்கு முதல் வணக்கம். உங்களைச் சந்தித்து ரொம்ப நாளாகிவிட்டது. மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. முதலில் யார் முதலிடத்தை அடைகிறார்கள் என்பது முக்கியமில்லை. கடைசியில் யார் முதலிடத்தைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். உங்களுடைய அன்பால்தான் நான் இந்த இடத்தில் நிற்கிறேன்.
சிறு வயதிலிருந்து நடிப்பதால் ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டேன். அதற்காகக் கோபித்துக் கொள்ளாதீர்கள். திரும்ப வந்துவிட்டேன். இனிமேல் எப்போதும் உங்களைவிட்டு நான் எங்கேயும் போகமாட்டேன். நாம் வெற்றிபெறும்போது நம் பின்னால் நிறைய பேர் வருவார்கள்.
ஆனால் அதுவே ஒருவன் தோல்வியடைந்துவிட்டான், என்றால் யாரும் நிக்கமாட்டார்கள். ஆனால் என் தோல்வியிலும் என்னுடன் நீங்கள் அனைவரும் நின்றீர்களே. அப்படிப்பட்ட உங்களை நான் எப்படி விட்டுக் கொடுப்பேன். யாருடைய அறிவுரையையும் கேட்காதீர்கள். நான் கூறுவது அறிவுரை அல்ல. பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் விட்டுவிடுங்கள்.
எதற்காகவும் கவலைப்படாதீர்கள். கஷ்டம் வந்தால் முதலில் பாட்டுப் போட்டு நான்றாக நடனம் ஆடுங்கள். நம்மைப் பலர் திட்டுகிறார்கள் என்றால் நாம் ஜெயிக்கிறோம் என்று அர்த்தம். பிரச்னை இல்லாமல் வாழ்க்கை இல்லை. நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.
திரைத் துறை தொடங்கி எல்லோரும் இவன் வேண்டாம். இவன் கெட்டவன் என்று சொல்கிறார்கள். ஆனால் ஏன் என்னை உங்களுக்கு பிடித்திருக்கிறது என்று தெறியவில்லை. நீங்கள் என்னை இப்படிக் கைத்தட்டி ஏற்றிவிடுவதால்தான், என்னை தேவையில்லாமல் சிலர் சீண்டுகிறார்கள். ஒருவழியாக பிரச்னை முடிந்து மாநாடு தொடங்கியிருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ”வீடியோ எடுக்குற வேல வச்சிக்காத” - ரசிகரை கண்டித்த சமந்தா!