சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், தனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கியுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கோரி, காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று புகார் மனுவை அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’எனக்கு ட்விட்டர், பேஸ்புக் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. சமூக வலைதளங்களில் நான் இயங்கவில்லை.
போலிக் கணக்கு
எனது நண்பர்கள் மூலம், ட்விட்டரில் என் பெயரில் உள்ள போலியான கணக்கு குறித்து தெரிந்து கொண்டேன். அதில், நான் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் ஸ்டாலினிடம் டாஸ்மாக்குகளை மூடக் கோரிக்கை வைத்ததுபோல் பதிவிடப்பட்டுள்ளது.
மன உளைச்சல்
நானுண்டு என் வேலை உண்டு என இருக்கும் நிலையில், இதுபோன்று சில விஷக் கிருமிகள் செய்யும் வேலைகள், வீணான மன உளைச்சலை தருகிறது.
போலிக் கணக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்’ என்றார்.
நடவடிக்கை
போலிக் கணக்கை நீக்கம் செய்யக்கோரி, சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் ட்விட்டர் நிறுவனத்துக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்