சென்னை : நடிகர் சத்யராஜ் கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக நடிகர் சத்யராஜுக்கு கரோனா பாதிப்பு தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமானதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். தொடர்ந்து, அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன. இதேபோல் நடிகை திரிஷா, இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் எஸ்எஸ் தமன் ஆகியோரும் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இயக்குனர் பிரியதர்ஷன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து சமூக வலைதளத்தில் கூறியுள்ள நடிகை திரிஷா, “தாம் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றிய போதிலும் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளேன்.
புத்தாண்டுக்கு முன்னர் பாதிக்கப்பட்டுள்ளேன், தற்போது குணமடைந்துவருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். நடிகை திரிஷா புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக லண்டன் சென்றுள்ளார். அங்கு அவர் கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக நடிகர் மகேஷ் பாபு, அருண் விஜய், நடிகை லட்சுமி மஞ்சு ஆகியோரும் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : இரண்டாவது முறையாக ஷெரினை தாக்கிய தொற்று