வெற்றிவிழா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஆர்.கே. தொடர்ந்து கட்ட பஞ்சாயத்து, தூண்டில் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், எல்லாம் அவன் செயல், அழகர் மலை, புலி வேஷம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார்.
அவன் இவன், ஜில்லா, பாயும் புலி உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார். நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருந்துவரும் ஆர்.கே., விஐபி ஹேர் கலர் ஷாம்பு நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.

சமீபத்தில் இவர் 1,014 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று திரட்டி அவர்களை விஐபி ஹேர் கலர் ஷாம்புவை பயன்படுத்தச் செய்து, அதன்மூலம் இதன் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்ற உலக சாதனை முயற்சியில் வெற்றி கண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.
இதனிடையே மலேசிய அரசின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் டத்தோ விருது நடிகர் ஆர்.கே.விற்கு கிடைத்துள்ளது. சினிமா, தொழிலதிபர் என பல்வேறு துறைகளில் வெற்றிபெற்று இவர் ஆற்றிவரும் சமூக சேவைகளையும் பாராட்டும் வகையில், இவருக்கு டத்தோ விருதை வழங்கி மலேசிய அரசு கவுரவித்துள்ளது.

இந்த விருதை பெரும் இரண்டாவது தென்னிந்திய நடிகர் ஆர்.கே. என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடிகர் ராதாரவி இந்த விருதை பெற்றிருக்கிறார். பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானும் இந்த விருதை பெற்றுள்ளார்.