திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்படியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயதுக் குழந்தை சுஜித்தை மீட்கும்பணி 64 மணி நேரத்தைத் தாண்டி நடைபெற்று வருகிறது. கடந்த 25ஆம் தேதி மாலை 5.40க்கு விழுந்த குழந்தையை நான்காவது நாளிலாவது மீட்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதற்காக கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அவர், 'நம்முடைய பிரார்த்தனை குழந்தையைக் காப்பாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது இன்று-நேற்று நடக்கும் பிரச்னை அல்ல; பல ஆண்டுகளாக நடக்கிறது. ஆழ்துளைக் கிணறு தோண்டிய பின், அதனை மூடாமல் விடும் நபர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். யாருக்கோ நடந்தது நமக்கு நடக்காது என்பது அசட்டு நம்பிக்கை. வரும் முன் காப்போம் என்ற வார்த்தைக்கிணங்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.