இந்தாண்டு கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் அதற்கான ஆலோசனைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டுவருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அவர், சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் மற்றும் நிர்வாகிகள் கலந்திருந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இதுவரை மன்றத்தில் எத்தனை பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்பது குறித்தும், கட்சிப் பணிகள் இன்னும் எத்தனை விழுக்காடு முடிக்க வேண்டியுள்ளது உள்ளிட்டவை குறித்தும் ரஜினிகாந்த் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கிராமவாரியாக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை நடிகர் ரஜினி சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றார்.
தற்போது, ரஜினி நடித்து வெளியாகியுள்ள தர்பார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், குஷ்பூ, மீனா ஆகியோரது நடிப்பில் புதிய படம் தயாராகி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற அந்தப்படத்தின் படப்பிடிப்பில் தனது பகுதியை அண்மையில் முடித்துவிட்டு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.
இதேபோன்று நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிக்கும் படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்றத் தகவலும் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. எப்படியும் இப்படங்கள் முடிய பத்து மாதங்களாவது ஆகும் என்பதால் அக்டோபரில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எப்படி இருக்கு 'தர்பார்' படம்: தமிழ் மக்களின் கருத்து