பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகனும், நடிகருமான ராதாரவி தமிழ் திரையுலகில் 1976ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். தனது திரையுலக பயணத்தில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ராதாரவி அரசியல் வட்டாரத்திலும் முக்கிய பிரமுகராக வலம்வருகிறார்.
திமுக, அதிமுக என மாறிமாறி அரசியல் களம் கண்டுவந்த இவர், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைக்கூறி விவாதப்பொருளாகவே இருந்துவருகிறார்.
நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது தானாகவே அக்கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார். தொடர்ந்து அதிமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்த ராதாரவி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்னை வருகை தந்திருக்கும் நிலையில், விமான நிலையத்தில் ஜே.பி. நட்டாவிற்கு நடிகர் ராதாரவி சால்வை அணிவித்து அவரது முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்ற வார்த்தைக்கு ஏற்ப ஒரு காலத்தில் பாஜகவை எதிர்த்து பரப்புரை மேற்கொண்ட ராதாரவி இன்று அக்கட்சியிலேயே இணைந்து அரசியல் களமாட இருக்கிறார்.
இன்னும் எத்தனை உயிர்களை தியாகம் செய்ய? - கொந்தளிக்கும் வரலட்சுமி