சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ராதே ஷியாம்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ், உதயநிதி ஸ்டாலின், மதன் கார்க்கி, சிபி சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின்,
“இந்த விழாவிற்காக மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பை கட் அடித்துவிட்டு வந்துள்ளேன். படம் முழுவதும் பிரபாஸும் பூஜாவும் காதலித்துக்கொண்டே இருக்கிறார்கள். மற்ற படங்களில் பறந்து பறந்து அடிப்பார். இதில் பறந்து பறந்து காதலித்துள்ளார்” என நகைத்தார்.

பின்னர் பேசிய சத்யராஜ், “பிரபாஸ் படத்தில் கார் பறக்கும். இப்படத்தில் கப்பலே பறக்கிறது. நடிப்பது என்பது வேறு வாழ்வது என்பது வேறு, பெரியார் படத்தில் வாழ்ந்துள்ளேன். இப்படத்தில் நடித்துள்ளேன். பிரபாஸின் அழகுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது.

பாகுபலிக்குப் பிறகு பிரபாஸுக்கு மிகப்பெரிய பொறுப்பு வந்துள்ளது. இப்போது பான் இந்தியா படம் என்பது பல்வேறு மொழிகளிலுள்ள நடிகர்களை நடிக்க வைப்பது என்பதாக மாறிவிட்டது. இப்படம் டைட்டானிக் வசூலை தாண்ட வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய பூஜா ஹெக்டே, “எனது சினிமா வாழ்க்கையில் முதல் படம் முகமூடி. தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து எனது நேரடி தமிழ் படமான பீஸ்ட் படத்தின் மூலம் ரசிகர்களை சந்திப்பதில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரபாஸ், “சத்யராஜுடன் எனக்கு இது மூன்றாவது படம். முதல் படம் ‘மிர்ச்சி’ வெற்றி பெற்றது. அதற்கு பிறகு ‘பாகுபலி’ மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படம் பாகுபலி அளவுக்கு வேண்டாம். அதற்கு கீழே இருந்தாலும் பரவாயில்லை.

இப்படத்தின் ஹீரோ ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாதான். இப்படத்திற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர். என்னை வைத்து இவ்வளவு பட்ஜெட்டில் காதல் படம் தயாரிக்க மிகப்பெரிய தைரியம் வேண்டும். பாகுபலிக்குப் பிறகு என்னை வைத்து காதல் படம் எடுக்க இயக்குநர் ராதாகிருஷ்ண குமாருக்கு எப்படி எண்ணம் வந்தது என தெரியவில்லை. இப்படத்தில் யுவன் பாடிய பாடல் நன்றாக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: மாநாடு 100ஆவது நாள் வெற்றி - ரசிகர்களுடன் கொண்டாடிய சிம்பு!