மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது. இப்படத்தில் கண்ணபிரான் என்ற காவல் அலுவலராக நடித்து அசத்தியிருந்தவர் நடிகர் - ஒளிப்பதிவாளர் நட்டி (எ) நட்ராஜ்.
இந்தப் படத்தையடுத்து நட்டி அடுத்தாக அறிமுக இயக்குநர் சாய் கார்த்திக் இயக்கும் 'இன்ஃபினிட்டி' படத்தில் நடித்துவருகிறார். இதில் வித்யா பிரதீப் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மாறுபட்ட கதைக்களம் கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிகட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மென்பனி புரொடக்ஷன்ஸ் சார்பாக மணிகண்டன், பிரபு, அற்புதராஜன், பாலபாஸ்கர் ஆகியோர் இணைந்து 'இன்ஃபினிட்டி' படத்தைத் தயாரிக்கின்றனர். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் இன்று (ஏப்ரல் 14) வெளியிட்டுள்ளனர்.
இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓர் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமாகவும், சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கிய இக்கதை மருத்துவத் துறையில் நடக்கும் கறுப்புப் பக்கங்களைத் தோலுரிப்பதாக அமையும் எனப் படத்தின் இயக்குநர் சாய் கார்த்திக் கூறியுள்ளார். விரைவில் இந்தப் படம் திரைக்கு வரும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.