தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7ஆம் தேதி பதிவியேற்கிறார். இந்நிலையில், ஸ்டாலினை கடந்த இரண்டு நாள்களாக நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், அவரது மனைவி கமீலா நாசர் சந்தித்தனர். அப்போது திரைப்படத்துறை தொடர்பான கோரிக்கைகளை நாசர் எடுத்துரைத்தார்.
இதுகுறித்து நாசர் கூறுகையில், ”தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நானும் எனது மனைவி கமீலா நாசரும் சந்தித்து வாழ்த்துக் கூறினோம். அப்போது, தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தற்போது உள்ள சூழலையும். அதனால் பென்ஷன் பெறமுடியாமல் இந்த கரோனா காலத்தில் மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்களின் நிலைமையையும் எடுத்துக் கூறினேன்.
கண்டிப்பாக ஆவன செய்கிறேன் என்று ஸ்டாலின் உறுதியளித்தார். அதற்காக அவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் அவருக்கு, அனைத்து நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.