சென்னை, தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில், தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகம் இயங்கிவருகிறது. டிசம்பர் 7ஆம் தேதி அதிகாலை அலுவலகத்திலிருந்து கரும்புகை வெளியேறியது.
இதைக் கண்ட காவலாளி உடனடியாக இது குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
நடிகர் சங்க விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், தற்போது தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகம் சிறப்பு அலுவலர் கண்காணிப்பின்கீழ் இயங்கிவருகிறது.
தீயில் பல முக்கிய ஆவணங்கள், கணினி பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து, தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல்வேறு பிரச்னைகள் நிலவிவரும் நிலையில் தீ விபத்து சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உரிய நேரத்தில் கடமையாற்றிய தீயணைப்பு துறைக்கும் அரசு பொறுப்பு அலுவலர்களுக்கு நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நாசர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாசர் கூறுகையில், ''அது விபத்து தான். முக்கிய ஆவணங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறது. உரிய நேரத்தில் கடமையாற்றிய தீயணைப்பு துறைக்கும் அரசு பொறுப்பு அலுவலர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறினார்.