பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று (செப். 25) உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவர் மரணம் சினிமா துறையினரையும், இசை விரும்பிகளையும் ஒட்டுமொத்தமாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா அறிகுறி என்று அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பின்னர் அவர் உடல் நிலை மோசமானதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
'என்னை தூக்கிவிட்டவர் அவர்' - எஸ்.பி.பி குறித்து சதுரங்க வீரர் விஸ்வநாதன் உருக்கம்!
இதனைத் தொடர்ந்து அவரது நண்பர்களும், உலகளவில் உள்ள ரசிகர்களும் கூட்டு பிரார்த்தனை செய்தனர். அதனையடுத்து அவர் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. கரோனா தொற்று பாதிப்பும் அவருக்கு குறைந்திருந்தது. தொடர்ந்து 51 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை திடீரென நேற்று முன்தினம் (செப். 24) மோசமடைந்த நிலையில், அவர் நேற்று (செப். 25) காலமானார்.
பின்னர் அவர் மறைவிற்கு அனைத்து தரப்பினரும் தங்களின் இரங்கலைப் பதிவுசெய்துவந்தனர். அதேபோல், தனது குரலாய் மக்கள் மனதில் குடிகொண்ட, ‘மைக் கோகன்’ என்று பெயர் வாங்கித் தந்த எஸ்.பி.பிக்கு தனது இரங்கலை நடிகர் மோகன் காணொலிப் பதிவு மூலமாக தெரிவித்துக்கொண்டார்.
அதில், “இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். நம்ப முடியவில்லை. 45,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி நம்மை எல்லாம் மகிழ்வித்தவர் இன்று நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த இழப்பை எந்த வார்த்தைகளைப் போட்டு நிரப்புவது என்று தெரியாமல் அல்லாடுகிறேன்” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்பிபி சார் செய்த சாதனைகளை இனிமேல் யாராவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை. அவருடைய இசைப்பயணத்தில் எனக்கும் சில பாடல்களைப் பாடியுள்ளார் என்று நினைக்கும் போது மகிழ்ச்சி. முதல் பாடலிலிருந்து கடைசியாக பாடிய பாடல் வரை அவருடைய குரல் ப்ரெஷ் ஆகவே இருக்கும். எனக்கு தெரிந்தவரை எதிரிகளே இல்லாத மனிதர் எஸ்.பி.பி சார். அது மிகவும் அபூர்வம்.
அவர் குரலின் மேஜிக் என்னவென்றால், எஸ்.பி.பி. சார் யாருக்குப் பாடினாலும் அவர்களே பாடுவது போல் இருக்கும். அப்படித்தான் எனக்கும் அமைந்தது. இன்னும் பல நூறு ஆண்டுகளானாலும் அந்தக் குரல் மூலம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துக்கொண்டே இருப்பார். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.