கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழில் 'நான் ஈ' படத்தில் நடித்ததன் மூலம் வில்லனாக அறிமுகமாகினார். தான் நடித்த முதல் படத்திலேயே இவர் எளிதாகத் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதனையடுத்து அவர் விஜய்யுடன் இணைந்து புலி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஜலதரங்கன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவரின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ் சினிமாவில் இவர் தாமதமாக அறிமுகமானாலும் தமிழ் சினிமாவுக்கும் இவருக்கு ஆரம்பத்திலிருந்தே நெருங்கிய தொடர்புண்டு.
தமிழில் வெளியான ’வாலி’ படத்தின் கன்னட ரீமேக்கில் இரட்டை வேடங்களை ஏற்று நடித்தார். கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான இந்த படம் அதேபேரில் கன்னட மொழியில் வெளியாகி ஹிட் அடித்தது. அதேபோல், பாலா இயக்கத்தில் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சேது திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் அவர் 2001ஆம் ஆண்டு நடித்தார்.
இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவராக வலம் வருகிறார். இவர் கன்னட, தமிழ் போன்ற மொழி படங்களில் மட்டும் நடிக்காமல் இந்தி மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
’தபாங் 3' படத்தில் சல்மான் கானை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு, பல்வேறு பாராட்டுகள் குவிந்தன. இந்தப் படத்தின் மூலம் அவருக்கு ஏகப்பட்ட இந்தி வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
நடிகர் சுதீப் இன்று (செப் 2) தனது 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என சமூக வலைதளங்களில் சுதீப்பிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் கரோனா தொற்று காரணமாக அவர் இந்த முறை ரசிகர்கள் தன்னை நேரில் பார்க்க வரவேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் ரசிகர்களுடன் நேரலையில் உரையாட இருப்பதாகவும் அதற்காக தயாராகக் காத்திருங்கள் எனவும்தெரிவித்துள்ளார்.