சென்னை: கல்கியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை, புகழ்பெற்ற இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக்கி வருகிறார். கோலிவுட் உலகில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் உள்பட பலரும், இந்நாவலை திரைப்படமாக்க முயற்சித்தனர். அந்த கனவு தற்போது மணிரத்னம் மூலமாக மெய்ப்பட உள்ளது.
பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னன் அருள்மொழிவர்மன் கதையை விவரிக்கும் விதமாக இந்த நாவல் அமைந்திருக்கும். இயக்குநர் மணிரத்னத்தின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தற்போது கிட்டத்தட்ட முழுமையாக முடிவடைந்துள்ளது.
வந்தியத்தேவன் பணி நிறைவு
மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை, படத்தயாரிப்பு நிறுவனமான லைகா பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. படப்பிடிப்பானது தாய்லாந்தில் தொடங்கி புதுச்சேரி, ஹைதராபாத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
மிக பிரமாண்டமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் விக்ரம், ஜெயராம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, அஸ்வின், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்நிலையில் பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி, தனது பகுதி பணிகளை முடித்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், “இளவரசி @trishtrashers (த்ரிஷா), நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசேசசசசச @actor_jayamravi, (ஜெயம் ரவி) என் பணியும் முடிந்தது!” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒரு மில்லியனை கடந்த எண்ணித்துணிக - உற்சாகத்தில் படக்குழுவினர்