சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சில தினங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தில் நடிகர் தனுஷ், ஐஷ்வர்யா லக்ஷ்மி, ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜூ ஜார்ஜ், கலையரசன், சரத் ரவி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.
இரவு பகலாக இணைந்து நடித்துள்ள இந்த நடிகர் பட்டாளம், திரைக்கு பின்னால், மிகச்சிறந்த நட்பினை பேணி வருகிறார்கள். நடிகர் கலையரசன் படப்பிடிப்பில் தனுஷ் தன்னிடம் எவ்வளவு இனிமையாக நடந்து கொண்டார் என்பது குறித்த இனிய நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து கலையரசன் கூறியதாவது, " இங்கிலாந்தில் பனி மிக அதிகம். கடும் குளிர் வாட்டி எடுக்கும். நான் இந்தியாவில் இருந்து திரும்பியிருந்தேன். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி எடுக்கும் சமயம் கடுமையான குளிர் காரணமாக என்னால் காரை விட்டே இறங்க முடியவில்லை.
படத்தின் இடைவேளை காட்சி Canterbury யில் எடுக்கப்பட்டது அப்போதெல்லாம் அங்கு கடும் குளிர் நிலவியது. அங்கு கேரவனும் இல்லை, என்னுடைய அறையும் வெகு தொலைவில் இருந்தது. வழக்கமாக இரவு நேர படப்பிடிப்பில் நான் தூங்க மாட்டேன். ஏனெனில் தூக்க கலக்கத்தில் கதாபாத்திரத்தை சரியாக செய்ய முடியாது.
அதனால் அந்த குளிரில் என் நடுக்கத்தை தவிர்க்க படப்பிடிப்பில் ஒரு ஓரமாக ஒதுங்கியிருந்தேன். என் நடுக்கத்தை கண்ட நடிகர் தனுஷ், அப்போது தான் புதிதாக அவர் வாங்கியிருந்த, அவரது குளிர் தாங்கும் தெர்மல் ஆடையினை எனக்கு தந்தார். அவரது செயல் என் மனதில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் ஒரு பெரிய நடிகர் போன்ற பந்தா இல்லாமல் அனைவரிடமும் மிக எளிமையாக பழகினார். எல்லோருடத்திலும் மிக நட்புடன் அன்பு காட்டினார்" என்றார்.
இதையும் படிங்க: 'ஜகமே தந்திரம் இரண்டாம் பாகம் எழுதச் சொல்லியிருக்கேன்...' - தனுஷ்