சென்னை: ஹிந்ததுத்துவா குறித்த காட்சிகளால் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்துக்கு சென்சார் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜோக்கர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜூமுருகன் இயக்கியுள்ள படம் ஜிப்ஸி. காதல் கலந்த பயணத் திரைப்படமாக தயாராகியுள்ள இந்தப் படத்தில் ஜீவா கதாநாயகனாகவும், நடாஷா சிங் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வரும் ஜீவா செல்லும் பயணங்களின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஜிப்ஸி படத்தின் திரைக்கதை அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த படத்தில் உத்திர பிரதேச மாநில முதலமைச்சரை கேலி செய்வது போன்றும், இந்து மத உணர்வை விமர்சிக்கும் விதமாகவும் காட்சிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, சமீபத்தில் ஜிப்ஸி படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தில் இடம்பெறும் 10க்கும் மேற்பட்ட காட்சிகளை நீக்குமாறு தெரிவித்துள்ளனர். சென்சார் குழுவினர் கூறியது போல் காட்சிகளை நீக்கினால் படத்தின் கதையே மாறும் சூழல் ஏற்படும் என்பதால் குழம்பிப் போயுள்ள 'ஜிப்ஸி' படக்குழு, படத்தை கருத்து மாறாத வண்ணம் காட்சிகளை மாற்றுவதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
மேலும், மறுதணிக்கைக்குச் சென்றால் படத்தின் ரிலீஸ் மூன்று மாதங்கள் வரை தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் அதுதொடர்பாகவும் விவாதித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.