இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் வெற்றி பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் '83'. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் தயாராகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 20 அன்று வெளியாகிறது.
இப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் வேடத்தில் நடித்துள்ளார். இது குறித்து கபீர் கான் கூறுகையில், 'ஸ்ரீகாந்த் கதாபாத்திரம் குறித்து யோசித்தபோது அவரது துறுதுறுப்பும், சுறுசுறுப்பும்தான் மனதின் முன் வந்து நின்றது.
விளையாட்டையும் தாண்டி அவரது சுறுசுறுப்பான குணம் அவரை எல்லோரிடத்திலும் பிரபலமாக வைத்திருந்தது. 1983 உலககோப்பையை மையமாக வைத்து படத்தை உருவாக்கும்போது அணியில் பங்குபெற்ற ஒவ்வொரு கிரிக்கெட் வீரரையும் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனமாக இருந்தோம்.
ஸ்ரீகாந்த் கேரக்டர் செய்வதற்கு அவரைப்போலவே சுறுசுறுப்பும் திறமையும் நிறைந்த ஒருவரை தேடினோம். ஜீவாவின் சில படங்களை பார்த்தபோது இவர்தான் பொருத்தமானவர் என முடிவு செய்தோம்.
அனைவரையும் கவர்ந்தவராக ஜீவா ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது படத்திற்கு இன்னும் பெரிய பலமாக இருந்தது. என்னதான் ஜீவா கிரிக்கெட் வீரராக இருந்தாலும் ஸ்ரீகாந்த் பேட்டிங் ஸ்டைலை கொண்டுவர, நிறைய பயிற்சி எடுத்துக்கொண்டு படத்தில் அவரை பேன்று தத்ரூபமாக பிரதிபலித்துள்ளார்' என்றார்.
இது குறித்து ஜீவா கூறுகையில், 'கிரிக்கெட் சிறுவயது முதலே எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. 83 படத்தில் ஸ்ரீகாந்த் கேரக்டர் என்னைத் தேடி வந்தபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
தமிழ்நாட்டில் வீதிகள்தோறும் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடித்திருப்பது என் வாழ்வின் வரம். இந்தக் கதாப்பாத்திரத்திற்கு தயாரக நிறைய அவகாசம் தந்து, என்னை சரியாக நடிக்க வைத்துள்ளார்கள். இந்தியாவின் மிகத் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங்குடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்.
1983ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலககோப்பையை வென்ற போட்டியை பார்த்தவர்களுக்கு '83' படம் பல மலரும் நினைவுகளை உண்டாக்கும். இப்படம் இந்திய முழுதுமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்' என்றார்.