தமிழ்சினிமாவில் அவதாரம் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் பாலசிங். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு வயது 67. தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் ஆரம்ப காலம் முதல் நடித்து வந்தவர் சென்னை விருகம்பாகத்தில் குடும்பத்தினருடன் வசித்துவந்துள்ளார்.
பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் அவருக்கான அங்கீகாரம் கிடைக்காதது நிதர்சனமான உண்மை. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஊர் திருவிழாக்களில் நடைபெறும் நாடகங்களில் வேடமேற்று நடித்து மக்களின் அன்பை பெற்றவர். சினிமாவில் நடிக்க தனது தன்னம்பிக்கையை மட்டுமே நம்பி சென்னை வந்தார்.
திறமை ஒருநாள் கதவை தட்டும் என்பதை அவதாரம் படம் மூலமே அறிந்து கொண்டார். அப்படம் அவரது முகத்தை படம் பிடித்து காட்டியது. பார்க்க பாவம்போல் தெரிந்தாலும் நடிப்பில் வில்லத்தனம் மாறாது இருந்தார். சாமி படத்தில் விக்ரமை ஜண்டு பாம் என்று வெறுப்பேத்தும் காட்சிகள் யாராலும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
தனுஷ் நடிப்பில் 'புதுப்பேட்டை' திரைப்படத்தில் நடித்து சினிமா வட்டாரம் மட்டுமல்லாது ரசிகர்கள் பொதுமக்கள் என அனைவரும் பாராட்டுகளை பெற்றார். என்ஜிகே படத்தில் இவரது காட்சிகள் பாராட்டுகளை பெற்றன. இந்நிலையில், சமீபத்தில் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலாசிங் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் திரைப்பட கலைஞர்கள் அஞ்சலிக்காக அவரது உடல் சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டது. மறைந்த நடிகர் பாலசிங்குக்கு நடிகர் பொன்வண்ணன், ரவிமரியா ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த பாலாசிங் அவதாரம், இந்தியன், புதுப்பேட்டை மட்டுமல்லாது சமீபத்தில் வெளியான மாகாமுனி, என்ஜிகே என தமிழிலும் பிற மொழி திரைப்படம் என 100க்கும் அதிகமான படத்தில் நடித்துள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.