நடிகர் ரஹ்மான் நடிப்பில் வெளியான 'துருவங்கள் பதினாறு' சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அதைத் தொடர்ந்து இவர் இயக்கிய 'நரகாசூரன்' திரைப்படம் வெளியாகவில்லை.
இதனிடையே தனது மூன்றாவது ப்ராஜெக்டாக கார்த்திக் நரேன் இயக்கியுள்ள திரைப்படம்தான் 'மாஃபியா: சாப்டர் 1'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மாஃபியா படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இதனையடுத்து இயக்குநர் கார்த்திக் நரேன் கூறுகையில், “இந்தப் படம் என்னுடைய 3ஆவது படம். இந்தப் படம் ஒரு போலீஸ் கதை. சென்னை பின்னணியில் நடக்கிறது. இரண்டு வலிமையான பாத்திரங்களான ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இரண்டு வேறு வேறு குணங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் இடையே நடக்கிற போர்தான் இந்தப்படத்தின் மையக்கதை. அருண் விஜய் போதைப்பொருள் தடுப்பு அதிகாரியா நடிச்சிருக்கிறார். பிரசன்னாவின் கேரக்டர் இந்தப்படத்தில் அடக்கி வாசிக்கிற மாதிரியனாது. ஆனா நடிப்பில் கலக்கியிருக்கிறார். பிரியா பாவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
படத்தில் உள்ள நான்கு பாடல்களும் ஒவ்வொன்றும் திரைக்கதையோட சம்பந்தபட்டதா தான் இருக்கும். முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம் மூன்று நாட்கள் மட்டும் தாய்லாந்தில் எடுத்திருக்கிறோம். பட வேலைகள் மொத்தமாக முடிந்து விட்டது வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பிப்ரவரி 5 ஆம் தேதி இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியிட இருக்கிறோம்” என்றார்.