ஒவ்வொரு ஆண்டும் மே ஒன்றாம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாளை தமிழ்நாடு மட்டும் அல்லாமல் உலக அளவில் உள்ள அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருவது வழக்கம்.
பல இடங்களில் அஜித்தின் பிறந்தநாள் சுவரொட்டிகள் ஒட்டி, கேக்குகள் வெட்டி, திரையரங்கில் சிறப்பு திரையிடல் செய்யப்படும்.
அதுமட்டுமல்லாது இணையங்களில் பிறந்தநாள் ஹேஸ்டாக் உருவாக்கியும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்தும் தல ஆன்ந்தம் (ANTHEM) என்ற பெயரில் பாடல் உருவாக்கியும் கொண்டாடுவார்கள் ரசிகர்கள்.
ஆனால் இந்தாண்டு கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திரையரங்குகளில் சிறப்புக் காட்சி, விழாக்கள், கொண்டாட்டங்கள் நடத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நடிகர் அஜித் ரசிகர்கள் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் மே 1ஆம் தேதி அவரின் பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
அதாவது காமன் டிபி (DP) உருவாக்கி ரசிகர்கள் மே 1ஆம் தேதி தங்களது சமூகவலைதள ஊடகமான வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவைகளில் அந்த டிபியை வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர்.
மேலும் இந்த காமன் டிபியை (DP) திரை பிரபலங்களான அருண்விஜய், ஹன்சிகா, ப்ரியா ஆனந்த், இசையமைப்பாளர் எஸ். தமன், ராகுல் தேவ், பார்வதி நாயர், சதீஷ் சிவலிங்கம், பிரேம்ஜி, பிக் பாஸ் ரைசா, நித்தி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஹார்த்தி, நடிகர் சாந்தனு ஆகியோரைக் கொண்டு வெளியிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்கிடையில் இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் தனது பிறந்தநாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிரபலங்களுக்கு தனித்தனியே போன் செய்து காமன் டிபி வெளியிட தடைபோடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.