இயக்குநர் முத்து மனோகரன் இயக்கிய 'ஆண்கள் ஜாக்கிரதை' படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன், ஜாக்குவார் தங்கம், பிரவீன் காந்தி மற்றும் படக்குழுவினர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது கே. ராஜன் பேசுகையில், விலங்குகளை வைத்து படம் தயாரித்தால் விலங்குகள் நல வாரியத்தில் அனுமதி பெற்றுதான் படம் எடுக்க வேண்டும். இந்த படத்தில் ஆயிரக்கணக்கான முதலைகளை பயன்படுத்தி உள்ளனர். இருந்தாலும் இவை அனைத்தும் வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்டதால் இந்த நடைமுறை இப்படத்திற்கு தேவையில்லை.
மோடியின் ஆட்சி நல்லபடியாக நடைபெறுவதாக அனைவரும் கூறுகின்றனர் நானும் அதையே உணருகின்றேன். ஆனால் விலங்குகள் நல வாரியத்தில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. சமீபத்தில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு படக்குழுவினர் தடையில்லா சான்றிதழ் வாங்கினர்.
விலங்குகள் நல வாரியம் சென்னையில் இருந்து ஹரியானாவுக்கு மாற்றப்பட்டது தவறு. தென்னிந்தியாவில் நான்கு மொழிகளுக்கான படங்கள் தயாராகிறது. இங்கு ஒரு விலங்குகள் நல வாரியம் அலுவலகம் இருக்க வேண்டும். மோடி இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.