இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஆகிய நட்சத்திர பிரபலங்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே வெளிவர வேண்டிய இப்படம் கரோனா காரணமாக தற்போது பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள மாஸ்டர் படத்திற்கு பெரும்வரவேற்பு கிடைத்துள்ளது.
இத்திரைப்படத்தை 96 திரைப்பட இயக்குநர் பிரேம் குமார் தனது குடும்பத்தினருடன் நேற்று (ஜன.15) புதுக்கோட்டையில் திரையரங்கில் சென்று பார்த்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாஸ்டர் திரைப்படம் நன்றாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் கவரும் படி உள்ளது. தமிழ்நாடு அரசு 50 விழுக்காடு இருக்கைகள் தான் திரையரங்குகளில் அனுமதிக்க வேண்டும் என்று கூறுவதே சரியானது. இந்த நிலை படிப்படியாகத்தான் மாறும். பெரிய படமாக இருந்தாலும் சரி, சிறிய படமாக இருந்தாலும் சரி தற்போது சர்ச்சையில் சிக்குவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. கரோனா காலத்தில் அனைத்து துறைகளுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரைப்படத் துறையும் திரையரங்குகளும் மட்டும் விதிவிலக்கல்ல.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது குறித்து எந்த தகவலும் எனக்கு தெரியாது. அடுத்த படத்திற்கான கதையை எழுதி வருகிறேன். ஆனால், அது நிச்சயமாக காதல் கதையாக இருக்காது.
கேரளாவில் திரைத் துறையினருக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல, இங்கும் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும். அதற்கு தமிழ்நாட்டு திரைத்துறையினர் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அப்போது அது நடக்கும்.
தயாரிப்பாளர் சங்கமாக இருந்தாலும் சரி, நடிகர் சங்கமாக இருந்தாலும் சரி இரண்டாக பிரிந்து இருப்பதை தவிர்த்து ஒன்றாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக செயல்பட்டால் திரைத்துறை நன்றாக இருக்கும். திருட்டு வீடியோவை ஒழிப்பதை முதலில் திரைத்துறையில் இருந்து தொடங்க வேண்டும். அடுத்தது பொதுமக்களிடம் விழிப்புணர்வு வர வேண்டும். அதற்கு அடுத்தபடி தான் அரசு செயல்பட முடியும்”என்றார்.
இதையும் படிங்க : இந்தியில் மாஸ்டர் ரீமேக்!