'ஆடுகளம்', 'எங்கேயும் எப்போதும்' உள்ளிட்டப் படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் 'வேலையில்லா பட்டதாரி’ வெளியானது.
இதில் தன் கல்விக்கும், திறமைக்கும் ஏற்ற வேலை கிடைக்காத சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியாக நடித்திருந்தார், தனுஷ். பெருங்கனவுகளுடன் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, சம்பந்தமே இல்லாத வேறு துறைகளில் பணியாற்றுபவர்களின் வலியை பிரதிபலித்த முதல் தமிழ்த் திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி'.
இந்தத் திரைப்படம் காதல், காமெடி, சென்டிமென்ட், மாஸ் காட்சிகள் என அனைத்தும் கச்சிதமாகக் கலந்த 'சக்சஸ் பொட்டலமாக' அமைந்திருந்தது.
மெருகேற்றிய தாய், தந்தை கதாபாத்திரங்கள்
பாசமான தாயாக சரண்யா பொன்வண்ணனும், கண்டிப்பான தந்தையாக சமுத்திரக்கனியும் நடித்த காட்சிகள் படத்தை மெருகேற்றின. காதலியாக அமலா பாலின் சேட்டைகளும், விவேக் - தனுஷ் நகைச்சுவைக் காட்சிகளும் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தன.
இசையே முக்கியக் காரணம்...
இந்தப் படத்தின் வெற்றிக்கு இசையும், பாடல்களுமே முக்கியக் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை . தனுஷ் எழுதிய பாடல்வரிகளும் பாடல்களின் வெற்றிக்குப் பங்களித்தன. அனிருத்தின் பின்னணி இசையால் திரையரங்கே திக்குமுக்காடிப் போனது.
பணமழையில் நிரம்பிய பாக்ஸ் ஆஃபிஸ்
பாக்ஸ் ஆஃபிஸை பணமழையில் நிரப்பி, அனைத்துத் தரப்பு விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்று, தனுஷின் திரை வாழ்வில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தியது 'வேலையில்லா பட்டதாரி’.
ரசிகர்கள் கொண்டாட்டம்
இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட இரண்டாம் பாகமான 'வேலையில்லா பட்டதாரி 2', முதல் பாகம் அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆவதையொட்டி, தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சங்கு கழுத்தழகி செளந்தர்யாவின் பிறந்தநாள் இன்று!