பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி, கலையரசன், ரித்விகா, கேத்ரின் தெரசா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் ‘மெட்ராஸ்’. இந்த படம் வெளியாகி சினிமா விமர்சகர்களாலும், பொது மக்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டது. அதிலும் குறிப்பாக சென்னை மக்கள் இந்த படத்தை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை, பாடல்கள், நடிகர்கள் என அனைத்தும் கச்சிதமாக பொருந்திப்போன படம் ‘மெட்ராஸ்’. பாடலாசிரியர் கபிலன் ‘எங்க ஊரு மெட்ராசு’ பாடலிலேயே சென்னை மக்களின் வாழ்வியலையும், கதை சார்ந்த புரிதலையும் ஏற்படுத்தியிருப்பார்.
ரிப்பன் பில்டிங்க் ஹை கோர்ட் எல்லாம்
செங்கல் மணல் மட்டும் அல்ல
எங்களோட ரத்தங்களும் சேர்ந்திருக்குடா...
போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டு
கூட்டம் கூட்டி ஓட்டு போட்டு
ஏமாற்றமே எங்க பண்பாடுதான்
உழைக்கும் இனமே உலகை ஜெயித்திடும் ஒரு நாள்
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்
இதுபோன்று பாடல் நெடுக சென்னையை உருவாக்க பூர்வகுடிகள் பட்டப் பாடு குறித்தும், அவர்கள் சுரண்டப்படுவது குறித்தும், அம்மக்களின் உரிமை குறித்தும் எழுதியிருப்பார்.
ஒரு சுவர், அதை சுற்றி கதை
ஒரு சுவரை பிடிக்க நடக்கும் அதிகார சண்டை, இறுதியில் கல்விதான் நமக்கான அதிகாரத்தை பெற்றுத் தரும் என்ற புரிதலோடு திரைப்படம் முடியும். சென்னை பூர்வகுடிகள் பற்றிய புரிதலற்றவர்களுக்கு ‘மெட்ராஸ்’ திரைப்படம் தெளிவான புரிதலை ஏற்படுத்திய படம் என்று சொல்லலாம்.
வடசென்னை மக்கள் என்றால் ரவுடிகள் என்ற பிம்பத்தை மாற்றி, அவர்களின் வாழ்வியலை அழகாக காட்டியிருப்பார். சென்னை பூர்வகுடிகளின் மகிழ்ச்சி கானா பாடல், கேரம் போர்டு, ஃபுட்பால், பீப் சாப்பாடு என சின்ன சின்ன விஷயங்களில் அடங்கியிருக்கிறது, அது ரவுடியிசத்தில் இல்லை. அவர்களும் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர்கள் என பா. ரஞ்சித் படத்தை முடித்திருப்பார்.