சென்னை: 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் ஊழியர்கள் 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்து நசரத்பேட்டை பகுதியிலுள்ள ஈவிபி பிலிம் சிட்டியில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பிரமாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பிரேக் நேரத்தில் அடுத்த காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
அப்போது செட்டில் லைட்டிங் அமைக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த கிரேன் பாரம் தாங்காமல் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் படத்தின் உதவி இயக்குநர் கிருஷ்ணா, செட் உதவியாளர் சந்திரன், புரொடக்ஷன் உதவியாளர் மது என மூன்று பேர் பரிதாபமாக உயரிழந்தனர். அத்துடன் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து விபத்தில் காயமுற்ற அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்ற இந்தச் சம்பவத்துக்கு முன்னர், நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் படப்பிடிப்பில் பங்கேற்றனர்.
அவர்கள் நடித்து முடித்த இடத்தில்தான் அடுத்த காட்சிகளுக்கான ஏற்பாடுகளில் உதவியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த இடத்தில்தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நிகழ்வதற்கு சற்று நிமிடங்களுக்கு முன்னர்தான் காஜல் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து விபத்து நடந்த பின்னர், அந்தப் பகுதியை பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தாராம். இந்த விபத்தில் இயக்குநர் ஷங்கருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கமல்ஹாசன் படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு