சினிமா உலகத்திற்குள் நுழைய பலர் முயற்சி செய்தார்கள், செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த உலகம் எப்போதும் நல்ல வரவேற்பை அளிப்பதில்லை. அதேபோல் முயற்சி செய்பவர்களின் வீட்டிலுள்ளவர்களும் முழுமனதாக அவர்களை அனுப்பி வைப்பதில்லை. ஏனெனில் சினிமா உலகம் இதுவரை பல பேருக்கு கொடுத்திருக்கும் தோல்விகள் அப்படி...
ஆனால், ஒருவரின் குடும்பம் மட்டும் அவரை அந்த உலகத்திற்கு முழுமனதாக அனுப்பி வைத்தது. எவ்வளவு முறை விழுவாய், விழு ஆனால் எழுந்துவிடு என்று ஸ்ரீதருக்கு (நடிகர் அஜித்), அந்த குடும்பம்தான் ஒட்டுமொத்தமான முகவரி. தாயை இழந்தவருக்கு, வயதான தந்தைக்கு மகனாக இருப்பவருக்கு அண்ணன் தகப்பனாகவும், தோழனாகவும், அண்ணி தாயாகவும் இருக்க வேண்டும்.
அப்படித்தான் ஸ்ரீதருக்கு அமைந்தது. அந்த குடும்பம் நடுத்தரமானது. நடுத்தர குடும்பத்தினருக்கு ஒரு வேலைக்கு செல்ல வேண்டும், மாதா மாதாம் சம்பளத்தைப் பெற வேண்டும் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதற்காக ஓயாமல் ஓட வேண்டும். இதுதான் பொதுவான நியதி.
அந்த குடும்பத்தில் ஒருவர் ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க வேண்டுமென பல வருடங்கள் காத்திருந்தால் ஏதேனும் ஒரு தருணத்திலாவது, அவரின் கனவை கொலை செய்யும் வார்த்தைகளோ, சூழலோ வந்து விழும். ஆனால், அப்படிப்பட்ட தர்மசங்கடமான சூழலை எந்த நேரத்திலும் கொடுக்காதது ஸ்ரீதரின் குடும்பம்.
தனக்கு வந்த அரியர்ஸ் பணத்தை கொண்டுவந்து மனைவியிடம் கொடுப்பது அதை வாங்கி கணவனின் தங்கைக்கு சாந்தா (சித்தாரா) சுடிதார் எடுக்க சொல்வது இல்லை இல்லை.. அண்ணிக்கு புடவை எடுக்கலாம் என தங்கை சொல்வது, எதுவும் வேண்டாம் தந்தைக்கு கண்ணாடி மாற்றலாம் என அண்ணன் சொல்வது இல்லை இல்லை நீ ஷூவை மாத்து முதல என தந்தை சொல்வது, இடையில் ஸ்ரீதர் வந்து எனக்கு ஒரு வாக் மேன் வாங்கிக் கொடுக்க சொல்வது இப்படி இழுப்பதற்கு சீட்டு குலுக்கி பார்த்துடலாம் என அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஸ்ரீதர் பெயரையே எழுதுவது என அவரின் குடும்பம் யாருக்கும் காண கிடைக்காத அரிதான வானவில்.
முக்கியமாக ஏதோ ஒரு மனநிலையில் தங்கை அண்ணனை கிண்டல் செய்ய அங்கு ஸ்ரீதர் உடையும்போது அண்ணன் வந்து கதை சொல்லி நம்பிக்கை செலுத்துவது, அண்ணனின் நண்பர் ஸ்ரீதரை மட்டம் தட்டுவது போல் பேச, லாவகமாக அந்த பேச்சை தந்தை மாற்றுவது என அவரின் குடும்பம் என்பது, பிறரின் உணர்வுகளையும், கனவுகளையும் மதிக்க மறுக்கும் இறுகிப்போன மனம் படைத்த மனிதர்கள் மத்தியில் முட்டி மோதி நின்றுகொண்டிருக்கும் நிழல் தரும் மரம்.
அதுமட்டுமின்றி, ஸ்ரீதருக்காக வீடு மாற்றிவிட்டு அந்த புதுவீட்டில் ஷெல்ஃப் ஒதுக்குகையில் ஸ்ரீதருக்கு மேல் ஷெல்ஃபை ஒதுக்கி, என் தம்பியை எப்போதும் மேலிடத்தில் வைத்திருக்க ஆசைப்படுகிறேன் என போகிறபோக்கில் உணர்த்தியிருப்பார் அண்ணன். ஒருவர் வென்ற பிறகு மேலிடம் கொடுப்பது நடைமுறைதான். ஆனால், வெறும் கனவுகளை மட்டும் சுமந்து அலைந்துகொண்டிருக்கும்போதே அவனுக்கு மேலிடத்தை ஒதுக்கி வைப்பது தாயால் மட்டுமே முடியும். அப்படிப் பார்க்கையில் ஸ்ரீதரின் அண்ணனும் அவனுக்கு ஒரு தாய்.
கணவனுக்காகவே இங்கு பலர் பிரார்த்தனை செய்வது இல்லை. ஆனால் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வாய்ப்பு கிடைத்து ரெக்கார்டிங் செல்லும்போது ஸ்ரீதருக்காக சாந்தா (ஸ்ரீதரின் அண்ணி) மௌன விரதம் இருப்பது தாயாக அண்ணி மாறிய தருணம். ஸ்ரீதருக்கு அண்ணன், அண்ணி என மொத்தம் இரண்டு தாய்கள்.
தன்னை விட்டுக்கொடுக்காத குடும்பத்திற்கு ஒரு ரூபாய்கூட சம்பாதித்து கொடுக்காத ஒருவனால் என்ன செய்ய முடியும். தன்னால் முடிந்த சிறு சிறு வேலைகளை செய்ய முடியும். ஆனால், அந்த சிறு சிறு வேலைகள் செய்யக்கூடிய சூழல் பெரிய வாய்ப்பு தேடி போகும்போது அமைந்தால் அதனையும் செய்து தன் வாய்ப்பையும் தேடிக்கொள்வான். ஸ்ரீதர் அப்படித்தான், ரயில் டிக்கெட் புக் செய்வது, அண்ணன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்சென்று விடுவது என தன்னால் முடிந்த பங்களிப்பை செய்தான்.
சினிமாவில் வாய்ப்பு தேடும்போது எக்கச்சக்கமான புறக்கணிப்புகள், அவமானங்களை சந்திக்க வேண்டும். பொறுமை வேண்டும். ஒரு வருடம், இரண்டு வருடங்கள் காத்திருப்புக்கே சலித்துக்கொள்பவர்கள் மத்தியில் ஸ்ரீதர் ஏழு வருடங்கள் காத்திருந்தான். வாய்ப்பு தேடி ஒரு இடத்திற்குச் செல்லும்போது இயக்குநரின் உறவினர்களுக்கு மது வாங்கிவருவது, , தான் சார்ந்த துறையை அவர்கள் கிண்டல் செய்யும்போது கூனி குறுகுவது என ஸ்ரீதரின் தியாகம் வலிமிக்கது. அந்த வலியை அவன் எப்போதும் தனது குடும்பத்திடம் காண்பித்ததில்லை.
கனவுக்கு துணை நிற்கும் குடும்பம், நண்பர்கள் என பலர் அமைந்தாலும், தனக்கு அமையும் தோழியும் அப்படி அமைவது முக்கியம். ஸ்ரீதருக்கு அமைந்த தோழி விஜியும்(ஜோதிகா) அப்படி அமைந்தார். ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடி போய் மற்றொரு புத்தகம் கிடைக்க அதை உரியவரிடம் கொடுத்து, அதுமூலம் ஸ்ரீதருக்கு வாய்ப்பு வாங்கி கொடுப்பது என ஸ்ரீதரை மட்டுமின்றி அவரின் கனவையும் நேசிக்கும் கனவு காதலி விஜி. குறிப்பாக இங்கு பலர் தனது துணையின் வேலையையே நேசிப்பதில்லை. ஆனால், விஜியோ ஸ்ரீதரின் கனவையே நேசித்தார்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு வாய்ப்பு கிடைத்தாலும் ஏதோ ஒரு சூழலால் அந்த வாய்ப்பு மீண்டும் பறிபோக ஸ்ரீதருக்கு துணையாய் இருந்த விஜி மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அந்த விழாவின் முடிவில் எழுந்த கைத்தட்டலை கேட்கும்போது ஸ்ரீதர், விஜி ஆகியோரின் கண்களில் வழியும் கண்ணீர் அவர்களுக்குள்ளான எதிர்காலத்திற்கு ஒரு பாதை அமைத்து கொடுக்கும்.
ஆனால் இசையை விட்டுக்கொடுப்பதற்கான சூழல் அமையும்போது அந்தக் காதலை தூக்கியெறிந்த ஸ்ரீதர் தன் துறையின் மீது எவ்வளவு வெறித்தனமான காதலையும், தன் திறமையின் மீது எவ்வளவு பெரிய நம்பிக்கையையும் வைத்திருக்கிறார் என்பது புரியும். இருப்பினும், தன் குடும்பத்திற்காக தன் ஏழு வருட காத்திருப்பை, காதலை விட்டுக்கொடுப்பதன் மூலம் அவர் குடும்பத்தின் மீது எவ்வளவு ஈடுபாடு வைத்திருக்கிறார் என்பது தெரியும். ஸ்ரீதருக்கு காதலை விட்டுக்கொடுப்பது ஒன்றும் புதிதில்லைதான் ஆனாலும், தன் நீண்ட காத்திருப்பை, எதிர்பார்ப்பை, ஏக்கத்தை விட்டுக்கொடுப்பதற்கு தற்கொலை என்று இன்னொரு பெயரும் உண்டு. அதேசமயம், தன் குடும்பத்திற்காகத்தானே என ஸ்ரீதரின் அந்தத் தற்கொலை, கொஞ்சம் அவருக்கு நிம்மதி கொடுக்கக்கூடியதுதான்.
உலகத்தில் எதை வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் வெல்லலாம். வெற்றிக்கு இங்கு கட்டுப்பாடு கிடையாது. ஆனால், அந்த வெற்றியைப் பெற குடும்பத்தின் ஆதரவைவிட குடும்பத்தின் துணை தேவை. அப்படி குடும்பத்தின் துணை இல்லாமலும் வென்றவர்கள் இங்கு பலர் உண்டு. இருப்பினும் குடும்பத்தின் துணை இருந்தால் பல மடங்கு நம்பிக்கை துளிர் விடும். அப்படிப்பட்டதுதான் ஸ்ரீதரின் குடும்பம். கோடம்பாக்கத்திற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம், வெல்லலாம். அது ஒன்றும் பெரிய கோட்டை கிடையாது. ஆனால் அங்கு செல்வதற்கு முன் ஸ்ரீதர் குடும்பத்தின் முகவரிக்கு சென்று அவர்களை ஒருமுறை பார்த்துவிட்டு செல்லுங்கள்....