சென்னை: நடிகர் சூரியின் நில மோசடி புகார் தொடர்பாக அக்டோபர் 29ஆம் தேதி அவர் ஆஜராக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நகைச்சுவை நடிகர் சூரி வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானார். சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் இவர், சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், செப்டம்பர் 20ஆம் தேதி வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், “2015ஆம் ஆண்டு அன்புவேல் ராஜன் தயாரிப்பில் 'வீரதீர சூரன்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். அதன் இணை தயாரிப்பாளராக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா என்பவர் இருந்தார். அதில் அவரது மகன் விஷ்ணு விஷால் நடித்தார். ரூ.40 லட்சம் சம்பளம் பேசப்பட்டது.
இச்சூழலில், திடீரென படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை மாற்றி படத்தின் பெயரையும் மாற்றி படப்பிடிப்பு நடந்தது. அதில் தனக்கு வரவேண்டிய சம்பளம் வரவில்லை. சென்னையில் இடம் வாங்க நான் விருப்பப்பட்டதை அறிந்த தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், இணை தயாரிப்பாளர் ரமேஷ் குடவாலா ஆகிய இருவரும், சென்னையை அடுத்த சிறுசேரியில் ஒரு இடத்தைக் காட்டினர்.
அந்த இடத்தை நான் வாங்க முடிவு செய்தேன். நான் நடித்து அவர்கள் தயாரித்த படத்தில் வரவேண்டிய தொகையை முன்பணமாகக் கழித்தனர்.
பின்னர் இடத்தை வாங்க 2015ஆம் ஆண்டு சிறுசேரியில் உள்ள இடத்தைப் பதிவு செய்ததற்கு அன்புவேல் ராஜனிடம் பல தவணையாக 3 கோடியே 15 லட்சம் ரூபாய் வரை கொடுத்தேன். சிறுசேரியில் உள்ள அந்த ஒரு ஏக்கர் 82 சென்ட் இடத்தை குறித்து விசாரித்ததில், அந்த இடத்திற்குச் சரியான பாதை இல்லை என்று தெரியவந்தது.
அன்புவேல் ராஜனிடம் சரியான ஆவணம் இல்லை என்பதும் தெரியவந்ததால் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணத்தை திருப்பித் தருவதாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்.
அதன் படி ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகை 2 கோடியே 69லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாயைக் கொடுக்காமல் ஏமாற்றி, அந்த தரப்பு ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து வந்தது” என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், இது குறித்து கேட்டபொழுது தன்னை மிரட்டியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இவ்வேளையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் அடையாறு காவல் நிலையத்தில் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே குற்றஞ்சாட்டப்பட்ட ரமேஷ் குடவாலாவின் மகன் விஷ்ணு விஷால், நடிகர் சூரி பொய் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், அவர் தான் தங்களுக்கு கடன் தொகையை தரவேண்டும் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது கோடிக்கணக்கான ரூபாய் குறித்த புகார் என்பதால், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக அக்டோபர் 29ஆம் தேதிக்குள் ஆஜராகி புகார் தொடர்பான விளக்கத்தை அளிக்கவேண்டும் என மத்திய குற்றப்பிரிவு காவல் துறை நடிகர் சூரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
அதன் பேரில் அக்டோபர் 29ஆம் தேதிக்குள் நடிகர் சூரி ஆஜராகி தனது விளக்கத்தை அளிக்கவுள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.