இந்திய சினிமாவில் விளையாட்டுத் துறை சார்ந்து பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அதிலும் கிரிக்கெட்டை மையமாக வைத்து வந்த திரைப்படங்கள் ஏராளம். அதிலிருந்து ‘ஜெர்சி’ திரைப்படம் தனித்து நிற்க அந்தக் கதை விவரிக்கப்பட்ட விதம் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
இந்தப் படத்தின் கதை நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இளைஞன் ஒருவன் ‘ஜெர்சி’ என்ற நாவலை வாங்க புத்தகக் கடைக்கு செல்கிறான். மார்கெட்டில் நல்ல விற்பனையில் இருக்கும் அந்நாவலில் ஒரு பிரதி மட்டுமே அங்கு இருக்கிறது. அதை அந்த இளைஞன் வாங்கிவிடுகிறான், அதேசமயம் அங்கு இரண்டு பெண்கள் அந்த நாவலை தேடிவந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். அவர்களிடம் வேகமாகச் சென்று நாவலை கொடுக்கிறான் அந்த இளைஞன், அதில் ஒரு பெண் அவனை தப்பாக புரிந்துகொண்டு பேசுகிறார். அதற்கு நாவலின் முன்பக்க அட்டையைக் காட்டி, இது என்னோட அப்பா, என் அப்பாவ பத்தி மத்தவங்க தெரிஞ்சுகிட்டா ரொம்ப சந்தோஷப்படுவேன் என நாவலை கொடுத்துவிட்டு நகர்கிறான் அந்த இளைஞன்.
அந்தப் பெண்கள், இது நிஜமாவே உன் அப்பாவா என கேட்க, 2 ட்ரிபிள் செஞ்சுரி, 7 டபுள் செஞ்சுரி, 36 செஞ்சுரி, 70 ஆஃப் செஞ்சுரி, என் அப்பா அர்ஜுன் அவரோட காலத்துல தலைசிறந்த பேட்ஸ்மேன் என அந்த இளைஞன் சொல்ல கதை விரிகிறது.
‘ஜெர்சி’ திரைப்படம் உங்களுக்கு ஒரு நாவலை வாசிக்கும் அனுபவத்தை தரலாம். குடும்ப சிக்கலாலும், பல்வேறு சூழ்நிலையாலும் தங்கள் கனவுகளைத் தொலைத்துவிட்டு அலைபவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் திரைப்படமாக இது இருக்கும்.
இந்தியாவுக்காக விளையாடத் துடிக்கும் சிறந்த கிரிக்கெட் வீரரான அர்ஜுன், உடல்நிலை கோளாறு காரணமாக கிரிக்கெட்டை கைவிடுகிறான். ஒருத்தியை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் அர்ஜுன், வேலையிழந்து குடும்ப சூழலுக்குள் சிக்கித் தவிக்கிறான். அப்போது அர்ஜுனின் மகன் நானிக்கு பிறந்தநாள் வருகிறது. பிறந்தநாள் பரிசாக இந்திய கிரிகெட் அணியின் மாடலில் ஜெர்சி வேண்டும் என நானி கேட்கிறான். மகனின் பிறந்தநாளன்று ஜெர்சியை வாங்கித்தர முடியாத அர்ஜுன், தனது பெயர் அச்சிடப்பட்ட உண்மையான இந்திய அணியின் ஜெர்சியை மகனுக்கு கிடைக்கச் செய்கிறான். அதற்காக அவன் என்ன செய்தான் என்பதுதான் ஜெர்சியின் கதை...
நானி, ஷ்ரதா ஸ்ரீநாத், சத்யராஜ் உள்பட படத்தில் வரும் அத்தனை நடிகர்களும் தங்கள் கதாபாத்திரத்திற்கு உண்மை செய்திருக்கிறார்கள். தொழில்நுட்பக் கலைஞர்களின் பணியும் மிகச்சிறப்பு, ‘ஜெர்சி’ படத்தை பார்த்தபின்பு அதை ‘மாஸ்டர்பீஸ்’ என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ததில் தவறில்லை என உங்களுக்கு தோன்றும். கௌதம் தின்னனூரியின் திரைக்கதை உங்களை தொடக்கம் முதலே கதையோடு ஒன்றிப்போகச் செய்துவிடும்.
காதல், திருமண வாழ்க்கை, லட்சியம் என அர்ஜுன் வாழ்க்கையின் மூன்று தளங்களில் இக்கதை பயணிக்கும். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காரணத்திற்காக, அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், கதையின் ஒவ்வொரு பகுதியும் முக்கியத்துவம் பெற்றிருக்கும். ‘ஜெர்சி’ திரைப்படம் ‘ஃபீல் குட் மூவி’ பட்டியலில் இடம்பிடிக்கக் காரணம், அதன் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள விதம். இந்தக் கதையில் பார்வையாளன் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வன்மம் நிறைந்த கதாபாத்திரமே கிடையாது.
சாரா - ஷ்ரதா ஸ்ரீநாத்
அர்ஜுனின் காதலி சாரா அவனை அவனாகவே ஏற்றுக்கொள்ளும் பெண்ணாக இருப்பாள். காதல் காட்சிகள் மிகையில்லாமல் இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். எந்த சூழலிலும் அர்ஜுனை விட்டுக்கொடுக்காமல் உறுதுணையாக இருக்கிறாள் சாரா.
கிரிக்கெட்டை விட்டு விலகியபின் வாழ்க்கையின் மீது பற்றற்றிருக்கும் காதல் கணவன் அர்ஜுனை, கரை தேற்றிவிட துடிக்கிறாள் சாரா. அர்ஜுன் - சாரா இடையேயான காட்சிகள் மிக உணர்வுப்பூர்வமாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
பயிற்சியாளர் மூர்த்தி - சத்யராஜ்
அர்ஜுனின் பயிற்சியாளர் மூர்த்தி (சத்யராஜ்) கதாபாத்திரம் பார்வையாளர்கள் மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கும். உங்கள் பள்ளி அல்லது கல்லூரி காலங்களில் உங்களுக்கு உத்வேகமாக இருந்த ஆசிரியரை மூர்த்தி கதாபாத்திரம் நினைவுபடுத்தும். நம் மீது நம்மைவிட அதிகமான நம்பிக்கை வைத்திருக்கும் மனிதர்கள் கிடைக்கப்பெறுவது வரம். அப்படி அர்ஜுன் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கும் மூர்த்தி, அவனது லட்சிய பயணத்துக்கு உறுதுணையாக இருக்கிறார்.
தந்தை - மகன் பாசம்
அர்ஜுனை ரோல்மாடலாக நினைக்கிறான் அவனது மகன் நானி. தந்தை - மகனுக்கு இடையேயான காட்சிகள் உங்களை கண்கலங்க வைக்கும். கதைக்கு மையப்புள்ளியாக அர்ஜுனின் மகன் கதாபாத்திரம் இருக்கிறது. கிரிகெட்டை கைவிட்ட அர்ஜுன், மீண்டும் தான் நேசித்த கிரிக்கெட்டை தேர்ந்தெடுக்க காரணமாக அமைகிறது இந்த கதாபாத்திரம். குழந்தை நட்சத்திரம் ரோனித் கம்ரா இக்கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார்.
ஜெர்சியின் ஆணிவேர் ‘நானி’
‘ஜெர்சி’ படத்தின் ஆணிவேரான அர்ஜுன் கதாபாத்திரத்தில் இயல்பாகப் பொருந்தியிருப்பார் நடிகர் நானி. இதற்காக அவர் பட்ட சிரமங்கள் ஏராளம். 70 நாட்கள் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்ட நானி, ரத்தக் காயங்களை எல்லாம் சந்திக்க வேண்டியிருந்தது.
நானியின் அர்ஜுன் கதாபாத்திரம் உங்களை படம் நெடுக உடன் அழைத்துக் கொண்டே பயணிக்கும். அதனால் அர்ஜுன் ஜெயிப்பது நாம் ஜெயிப்பது போல் இருக்கும். மீண்டும் ரஞ்சிக் கோப்பையில் ஆட அர்ஜுனுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது ஓடும் ரயில் அருகே நின்று கத்தித் தீர்க்கும் காட்சியில் நானியின் நடிப்பு நாம் ஏதோ சாதித்தது போன்ற உணர்வைக் கொடுக்கும்.
கடைசி மூன்று பந்துகளில் மூன்று சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெறச் செய்யும் சூப்பர் ஹீரோவாக அர்ஜுன் கதாபாத்திரத்தை காட்டாமல், கிரிக்கெட் மீது தீராக் காதல் கொண்ட ஒரு இளைஞன் விளையாடுவதைப் போன்று காட்சி அமைத்த இயக்குநர் கௌதம் தின்னனூரி பாராட்டுதலுக்குரியவர். ‘ஜெர்சி’ திரைப்படம் வெளியாகி இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இந்தத் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
திரைத்துறையை நேசிப்பவர்கள் நிச்சயமாக பார்க்க வேண்டிய படங்களில் ஒன்றாக ‘ஜெர்சி’ படத்தை சொல்லலாம். கௌதம் தின்னனூரியில் நேர்த்தியான கதை சொல்லலும், இதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பணியும் திரைப்பட உருவாக்கத்தில் உதவியாக இருக்கும்...
இதையும் படிங்க: #1yearofSuperDeluxe - அநீதிகளை உடைத்த அநீதி கதைகள்