டெல்லி: இந்தி திரையுலகில் எட்டு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நடிகை யாமி கெளதம், புதிய கதைகளத்துடன், புதுமையான கதாபாத்திரங்களில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.
2012ஆம் ஆண்டு வெளியான விக்கி டோனார் படம் மூலம் அறிமுகமான நடிகை யாமி கெளதம், பத்லாபூர், சனம் ரே, காபில், சர்கார் 3 உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இந்தி சினிமாவில் தான் கடந்து வந்த பாதை குறித்து அவர் கூறியதாவது:
திரையுலகில் எனது பயணத்தைப் பற்றி கூறுவதற்கு முன் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் என பலருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஏற்ற, இறங்கங்களிலிருந்து அமைதியாக பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இவை என் திறமை மீது நம்பிக்கையும், விடாமுயற்சியும் செய்ய வைத்தது.
ஒரு நடிகையாக இன்னும் பல்வேறு புதிய கதைகளையும், கதைக்களத்தையும் ஆராய வேண்டியுள்ளது. ஏராளமான இயக்குநர்கள், எழுத்தாளர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். புதுமையான கதாபாத்திரங்களால் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்த விரும்புகிறேன்.
பாலா என்ற படத்தில் அதுபோன்றதொரு கேரக்டரில்தான் ரசிகர்களைக் கவர்ந்தேன். என்னிடம் இதுபோன்றதொரு நடிப்பைத்தான் எதிர்பார்க்கிறார்கள். பொதுமுடக்கம் காரணமாக மும்பையிலேயே தங்கிவிட்டேன். இதனால் குடும்பத்தினரை மிகவும் மிஸ் செய்தேன். ஊர் சுற்றுவதில் எனக்கு அதிகம் விருப்பம் இல்லாததால் பொதுமுடக்கம் என்னை பெரிதும் பாதிக்கவில்லை.
இந்த சமயத்தில் வீட்டைச் சுத்தம் செய்வது, யோகா, சமையல், புத்தகம் வாசிப்பது, ஓவியம் வரைவது, குடும்பத்தினருடன் பேசுவது என இனிமையாக பொழுதைக் கழித்தேன். உரிய அனுமதி கிடைத்தவுடன் பாதுகாப்பை உறுதி செய்து வீட்டுக்கு செல்லவுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.