திரைப்படங்களை திரைப்படங்களாக பாருங்கள் என சினிமா விமர்சகர்கள் காலகாலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், திரைப்படங்களை அப்படி பார்த்துவிட்டு கடந்து செல்பவர்கள் குறைவு என்றே சொல்லலாம். திரைப்படங்கள் ஒரு மனிதன் மீது எந்த மாதிரியான நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதே அளவு தீய தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில், திரைப்படங்களை பார்த்து குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பற்றி இங்கே காணலாம்...
காதல் விண்ணப்பத்தை ஏற்காத பெண்ணை கல்லூரி வாசலில் வைத்து சுட்டுக்கொன்றான் தவ்சிஃப் எனும் இளைஞன். இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் திவ்யேந்து ஷர்மா ‘மிர்சாபூர்’ வெப் சீரிஸில் நடித்த முன்னா என்கிற பூல்சந்த் கதாபாத்திரத்தை பின்பற்றியதாக தெரிவித்தான்.
2016, ஸ்னாப்டீலில் பணியாற்றிவந்த திப்தி சர்னா என்பவர், தேவேந்திர குமார் என்பவரால் கடத்தப்பட்டார். திப்தியை கடத்த 1993ஆம் ஆண்டு வெளியான 'டர்’ திரைப்படத்தில் வரும் ஷாருக்கான் கதாபாத்திரம் உதவியாக இருந்திருக்கிறது. 14 மாதங்கள் திப்தியை பின்தொடர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.
2013, 2014ஆம் ஆண்டுகளில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட ஜகீத் மற்றும் அவரது பெண் தோழிக்கு அபிசேக் பச்சன், ராணி முகர்ஜி இணைந்து நடித்த ‘பண்டி அவுர் பப்லி’ கதாபாத்திரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
2008 வாக்கில் கேரளாவின் தென் மலபார் கிராம வங்கி கொள்ளையடிக்கப்பட்டது. 80 கிலோ தங்கம், ரூ. 25 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவத்தில், ஜோசப் எனும் கேங் லீடர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ‘தூம்’ திரைப்படத்தினால் கவரப்பட்டு, இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
ராஜ்குமார் ஹிரானியின் ‘முன்னா பாய் எம்பிபிஎஸ்’ படத்தைப் பார்த்து மருத்துவ படிப்புக்கான தேர்வில் முறைகேடு செய்தவர்கள் ஏராளம்.
அகமதாபாத்தில் 25 லட்ச ரூபாய் பணத்துக்காக பள்ளி செல்லும் 3 மாணவர்கள் 6 வயது சிறுமியை கடத்தி கொலை செய்தனர். சூட்டவுட் அட் லோகந்த்வாலா திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல காரில் பணத்துடனும், பயங்கர ஆயுதங்களுடனும் வலம்வர வேண்டும் என்பது தங்கள் ஆசை என விசாரணையில் தெரிவித்தனர்.
2017ஆம் ஆண்டு தீபக் என்பவரை டெல்லி போலீஸ் கைது செய்தது. கொலை முயற்சி, திருட்டு, போலீஸை தாக்கியது, செயின் பறிப்பு என பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட தீபக், சஞ்சய் தத்தின் தீவிர ரசிகராம்... அவரைப் போல கொடூரமான வில்லனாக வேண்டும் என்பதை லட்சியமாக வைத்து சுத்தியிருக்கிறார்.
மீரட்டில் 16 வயது சிறுவன் ஒருவன், காதலை ஏற்காத பெண்ணை கொலை செய்தான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனுஷ் - சோனம் கபூர் நடித்த ‘ராஞ்சனா’ படத்தை பார்த்து கொலை செய்ததாக தெரிவித்தான். எனக்கு கிடைக்காதவள், வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று போலீஸிடம் தெரிவித்துள்ளான்.
அதேபோல் அஜய் தேவ்கன் நடித்த ‘த்ரிஷ்யம்’ திரைப்படமும் பல்வேறு குற்றச் சம்பவங்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது.
இதையும் படிங்க: சௌமித்ர சாட்டர்ஜி: சத்யஜித்ரேவின் விருப்பமான நடிகர், வங்காள திரையுலகின் அடையாளம்!