மும்பை: இசையமைப்பாளர் வஜித்கான் மாரடைப்பால் இறந்ததாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பாலிவுட் இரட்டை இசையமைப்பாளர்களான சஜித்-வஜித் ஆகியோரில் வஜித்கான் ஜூன் 1ஆம் தேதி உடல்நலக்குறைவால் மறைந்தார். இதையடுத்து இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே, இவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை எனவும் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக வஜித்கான் குடும்பத்தினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சுரனா செத்யா மருத்துவமனையில் ஜூன் 1ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட வஜித்கான் (47), சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். அவருக்கு ஓராண்டு முன்னரே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்ட நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இந்த தருணத்தில் வஜித்கானுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிரின்ஸ் சுரனா, பிரசாந்த் கேவ்லே, கிர்தி சப்நிஸ், நிகில் ஜெயின், ரூபேஷ் நாயக், திபன் தியோலே, அசீம் தம்பா ஆகியோருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம். வஜித்கானை தங்களது சகோதரர் போல் அனைவரும் சிறப்பாக கவனித்தனர். அனைவரின் தன்னலமற்ற செயலுக்கு எங்களது இதயத்திலிருந்து நன்றியைத் தெரிவிக்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறைந்த இசையமைப்பாளர் வஜித்கானுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.