ஓமங் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் ‘பிஎம் நரேந்திர மோடி’. மக்களவைத் தேர்தலுக்கு முன்பே வெளியாக இருந்த இத்திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்தது.
இந்தத் திரைப்படம் மோடிக்கு ஆதரவாக எடுக்கப்பட்டுள்ள படம், தேர்தல் விதிமுறைகளை மீறி மோடிக்கு பரப்புரை செய்யும்விதமாக எடுக்கப்பட்டுள்ளது என வழக்கு தொடுக்கப்பட்டது. அதனால் தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்தனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதையடுத்து 2019ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி படம் வெளியானது. முதல் நாளில் 2.88 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இப்படத்தில் விவேக் ஓபராய் உடன் போமன் இரானி, மனோஜ் ஜோஷி, பிரசாந்த் நாராயணன், பார்கா பிஷ்ட், ராஜேந்திர குப்தா, ஜரீனா வஹாப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சந்தீப் சிங், ஆனந்த் பண்டிட், சுரேஷ் ஓபராய் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த வாழ்க்கை வரலாறு பிரதமர் மோடியின் அரசியல் பயணத்தை காட்டியுள்ளது.
இந்நிலையில், தற்போது இப்படம் மீண்டும் திரை அரங்கில் வெளியாக உள்ளது. கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் அக்டோபர் 15ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.
திரையரங்குகள் திறக்கப்பட்டு திரையிடப்படும் முதல் திரைப்படமாக பிஎம் நரேந்திர மோடி உள்ளது.