பாலிவுட் திரையுலகில் நடிகர், நடிகைகளின் ரகசிய காதலர்கள் மற்றும் அவர்களுடனான டேட்டிங் குறித்த செய்திகள் தினந்தோறும் வெளிவருவது வாடிக்கையான ஒன்றே. அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகர் விக்கி கவுசல், நடிகை கத்ரீனா கைஃப் உடன் டேட்டிங்கில் ஈடுபடுவதாக அண்மைக் காலமாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 'லஸ்ட் ஸ்டோரிஸ்', 'உரி - தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிகர் விக்கி கவுசல், தற்போது வளர்ந்துவரும் ஹீரோவாகத் திகழ்கிறார்.
இதனிடையே அவர், நடிகை கத்ரீனாவுடன் முக்கிய விழாக்கள், பார்ட்டிக்கள், பொது விழாக்கள், திரைப்படங்களில் சிறப்பு காட்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு ஒன்றாகச் செல்வதே இந்த செய்திகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதனிடையே சமீபத்தில் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த நடிகர் விக்கி கவுசல், “இந்த விஷயம் குறித்து எதையும் தெளிவுப்படுத்த வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. நான் எனது சொந்த வாழ்க்கையை வெளிப்படையாகவே வைத்துள்ளேன். அதில் என்னால் பொய் கூற முடியாது. அதில் எந்தவொரு கதையும் இல்லை” என்று கூறினார்.
மேலும் கடந்த சில மாதங்களாக இணையத்தில் உலாவரும் என்னைப்பற்றிய உறுதி செய்யப்படாத செய்திகளில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் விக்கி கவுசல் உடனான டேட்டிங் குறித்து பேசிய நடிகை கத்ரீனா கைஃப், “வதந்திகள் என்பது நம் வாழ்க்கையில் இருக்கும் ஒரு பகுதியாகும். தற்போது அதை புரிந்து கொள்ளும் மனநிலையை நான் பெற்றுள்ளேன். அதுவே உங்களை நிலைத்திருக்க வைக்கும். மேலும் ரசிகர்கள் அதை வைத்தே உங்களை விரும்பவும், தீர்மானிக்கவும் செய்வர்.
ஒரு நடிகராக இவையனைத்தையும் ஏற்றுக்கொண்டு பொது ஊடகங்களோடு சமாதானமாகச் செல்ல வேண்டும். ஒரு சில நாட்களில் அவை உண்மையாகவும், சில நாட்களில் பொய்யான ஒன்றாகவும் இருக்கலாம்” என்றார்.
ஆரம்பத்தில் இவ்வாறு தங்களின் டேட்டிங் குறித்து மறுப்பு தெரிவித்த பாலிவுட் பிரபலங்கள் பலர் பின்னாளில் காதலர்களாக மாறிய நிகழ்வுகள் பல கடந்த காலத்தில் அரங்கேறியிருக்கின்றன. எனவே, விக்கி கவுசல், கத்ரீனா ஆகியோரின் இந்த பதில்கள் உண்மையா அல்லது எதிர்வரும் காலங்களில் அது காதலாக மாறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: உச்சத்தில் ஆஸ்கர் ஃபீவர்: விருதுகளை அள்ளப்போகும் திரைப்படங்கள் எவை?