முன்னாள் பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் மகளான ஏக்தா கபூர் தனது வாழ்க்கைப் பயணத்தை சிறு வயதில் இருந்தே தொடங்கியுள்ளார். ஒரு நேர்காணலில் ஏக்தா கூறுகையில், எனக்கு 17 வயதாக இருந்தபோது எனது அப்பா என்னிடம் திருமணம் செய்துகொள் அல்லது உனக்குப் பிடித்தமான வேலை ஏதாவது செய்துகொள் எனக் கூறினார். அப்போது என்னிடம் அப்பா கொடுக்கும் பாக்கெட் மணியைத் தவிர வேறு ஏதும் தரமாட்டார். எனவே எனக்கு பணம் சம்பாதிக்க ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன் என்றார்.
பாலாஜி டெலிஃபிலிம்ஸ் என்ற பேனரின் கீழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அங்கு கிட்டதட்ட 130 நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளார். 'கியுகி சாஸ் பீ கபி பாஹு தி', 'கஹானி கர் கர் கி', 'கஹின் கிசி ரோஸ்', 'கசாட்டி ஜிந்தகி கி' உள்ளிட்ட சீரியல்கள் இவரது பிரபலமான சில சீரியல்கள் ஆகும். குடும்ப சீரியல், மர்மம் நிறைந்த த்ரில்லர் உள்ளிட்ட பல தொலைக்காட்சி சீரியல்கள் தயாரித்து தொலைக்காட்சி உலகில் புதுமை படைத்தார். சுஷாந்த் சிங் ராஜ்புத், வித்யா பாலன் போன்ற நட்சத்திரங்கள் முதலில் இவரது சீரியல்களில் நடித்த பின் தான் திரைத்துறைக்கு சென்றுள்ளனர்.
'நாகின்', 'யே ஹை மொஹபதீன்', 'கும்கம் பாக்யா', 'குண்டலி பாக்யா' போன்ற நிகழ்ச்சிகள் டிஆர்பியில் முன்னிலை வகித்து தெலைக்காட்சி உலகை ஆண்டு வருகின்றனர். ஏக்தா கபூர் தொலைக்காட்சியில் தயாரிப்பாளராக மட்டுமல்லாது வெள்ளித்திரையில் நடிகையாகவும் வந்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
தொலைக்காட்சியில் இருந்து திரைப்படங்களையும் தயாரித்த ஏக்தா கபூரின் படங்கள் அனைத்தும் தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது. இதற்கு சோர்ந்து போகாத ஏக்தா தனக்கான காலம் ஒன்று இருப்பதாக அப்போது கூறினார். பின் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை', 'தி டர்ட்டி பிக்சர்', 'ஜட்ஜ்மென்டல் ஹை க்யா', 'ட்ரீம் கேர்ள்' உள்ளிட்ட படங்களை தயாரித்து வெற்றியடைந்தார்.
ஏக்தா கபூர் ஜோதிடம், நியூமர்லாஜியில் அதிக நம்பிக்கைக் கொண்டவர். இவர் தயாரித்த பெரும்பாலனவை கே என்ற எழுத்திலேயே தொடங்கும். இது அவரது நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு. தொலைக்காட்சி, திரைத்துறையைத் தொடர்ந்து ஏக்தா கபூர் தற்போது ஆல்ட் பாலாஜி என்னும் சேனல் மூலம் இணையத்திலும் தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறார்.
வாடகை தாய் மூலம் ஏக்தா கபூர் திருமணம் செய்துகொள்ளமல் ஒரு ஆண்குழந்தைக்கு தாய் ஆகியுள்ளார். இதனை அடிப்படையாக வைத்து மெண்டல்ஹூட் என்னும் வலைதளத்தொடரை தற்போது தயாரித்துள்ளார்.
2001ஆம் ஆண்டு மே மாதம் ஆசியா வீக் பத்திரிகை மிகவும் செல்வாக்கு மிக்க 50 பெண்களின் பட்டியலை வெளியட்டது. அதில் ஏக்தாவுக்கு ஒரு இடம் அளித்தது. இது தவிர நாட்டின் சிறந்த 25 பெண் தொழில்முனைவோர் பட்டியலிலும் ஏக்தா இடம் பெற்றுள்ளார். 'இந்திய தொலைக்காட்சி அகாடமி விருதுகள்', 'ஃபோர்ப்ஸ் டைகூன் ஆஃப் டுமாரோ' போன்ற மதிப்பு மிக்க விருதகளையும் தன்வசம் வைத்துள்ளார். இப்படி தனது ஆளுமையால் எண்டர்டெய்மெண்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஏக்தா கபூருக்கு ஈடிவி பாரத் வணக்கம் செலுத்துகிறது.