'தப்பட்' என்ற படத்தில் நடித்திருக்கும் டாப்ஸி அதன் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அப்போது 'பிக் பாஸ் சீசன் 13' குறித்து பேசிய அவர், பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்று கூறப்பட்டு வன்முறையை பார்வையாளர்கள் மத்தியில் தூண்டுவதாக கூறினார்.
இதுபற்றி டாப்ஸி கூறியதாவது:
டிவியில் ஒளிபரப்பப்படும் வன்முறையை பார்வையாளர்கள் ஏன் ரசிக்கிறார்கள்? அது விளையாட்டல்ல. அதுவே நமக்கு நடந்தால் விளையாட்டாக பார்க்கமாட்டோம். மற்றவர்களுக்கு நிகழ்வது நமக்கு பொழுதுபோக்காகதான் தெரியும்.
நாம் அந்த இடத்தில் இருந்து, நமக்கு அவ்வாறு நிகழ்ந்தால் எப்படியிருக்கும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அப்போது நமது கருத்துகள் மாறுபடும். வன்முறைக்கு எதிரான கருத்துகள் வெளிவற கொஞ்சம் காலமாகும். ஆனாலும் நாம்தான் இதை தொடங்கவேண்டும். எனது நம்பிக்கைக்கு எதிரான விஷயங்களை பொதுமக்கள் பின்பற்றுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
முன்னாள் 'பிக் பாஸ்' போட்டியாளர் ஹினா கான் பேட்டி ஒன்றில், தற்போதைய பிக் பாஸ் சீசனில் சக போட்டியாளர்கள் மீது கோபம் வந்தாலோ, வாக்குவாதத்தில் ஈடுபட்டலோ அவர்களை அடிக்க உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. நான் பங்கேற்ற போட்டியில் இது இல்லாதது வருத்தமே என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக டாப்ஸின் கருத்து அமைந்துள்ளது. அத்துடன் அவர் நடித்துள்ள 'தப்பட்' படமும் பெண் மீது நடக்கும் வன்முறையை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் உருவாகியுள்ளது.
மிகவும் அன்யோன்யமாக இருக்கும் கணவன் - மனைவி பார்ட்டி ஒன்றுக்கு செல்கின்றனர். அப்போது அங்கு சின்ன பிரச்னை ஏற்பட, பார்டிக்கு வந்திருந்தவர்கள் முன்னிலையில் மனைவியின் கன்னத்தில் அடிக்கிறார் கணவன். இதனால் மனமுடைந்து, தன் மீது நிகழ்ந்த இந்த வன்முறையை காரணம் காட்டி விவகாரத்து கோருகிறாள் மனைவி. இதுதான் 'தப்பட்' படத்தின் கதை.
இதில் கணவனாக பவெய்ல் குலாட்டியும், மனைவியாக டாப்ஸியும் நடித்துள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்ததுடன், சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. படத்தை அனுபவ் சின்ஹா இயக்கியுள்ளார்.
பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் பிப்ரவரி 28ஆம் தேதி திரைக்கு வருகிறது.