பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், சமீப காலங்களில் நடிப்பைத் தாண்டி, சர்ச்சைக்குரிய விவகாரங்களில் கருத்துத் தெரிவித்து நெட்டிசன்களிடையே விவாதங்களைக் கிளப்புவதில் பிரபலமாக விளங்குகிறார். அந்த வகையில், தற்போது பொது மேடை ஒன்றில் தனது வயதைத் தவறாக தெரிவித்ததைத் தொடர்ந்து நெட்டிசன்களின் கேலிக்கு ஆளாகியுள்ளார்.
குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்த கருத்து பகிர்வுக் கூட்டம் ஒன்றில், தன் சக சினிமாத் துறையினருடன் கலந்துகொண்ட அவர், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தெளிவான பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளார்.
குடியுரிமைத் திருத்த சட்டம் குறித்து சரியான புரிதலற்று, இஸ்லாமியர்களுக்காக தேவையற்று கருணை தெரிவிப்பதாக அந்த செய்தியாளர் ஸ்வரா பாஸ்கரை சாடிய நிலையில், 2010ஆம் ஆண்டில் தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஏன் மாற்றுக் கருத்து தெரிவிக்கவில்லை என்று ஸ்வரா பாஸ்கரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஸ்வரா பாஸ்கர், 2010ஆம் ஆண்டு எனது வயது 15. எனவே அப்போது எனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்று தெரிவித்தார்.
ஸ்வரா பாஸ்கரின் தற்போதைய வயது 31ஆக உள்ள நிலையில், தன் அறிவின் வயது நாளுக்கு நாள் குறைந்து வருவதைத் தான் ஸ்வரா இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் என்றும், கணிதப் பாடம் இதைக் கேட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது எனவும் நெட்டிசன்கள் ஸ்வரா பாஸ்கரை கேலிக்குள்ளாக்கி சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் பிரபல ஹீரோயின்!