தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வருபவர் சமந்தா. 2010இல் வெளியான மாஸ்கோவின் காவிரி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கிலும் 20க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்து தொடர்ந்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்துவருகிறார்.
இந்த நிலையில், முதன் முறையாக இந்தியில் அறிமுகமாகும் சமந்தா 'தி பேமிலி மேன் 2' என்ற வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மனோஜ் பாஜ்பாயி நடிக்கும் இந்த சீரிஸின் முதல் பாகத்தில் நடிகை பிரியாமணி நடித்திருந்தார். அதன் 2ஆவது பாகத்தில் தற்போது சமந்தா நடித்து வருகிறார். இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த தொடரின், 2ஆம் பாகத்தில் சமந்தா நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக-அரசியல், அதிரடி திரில்லர் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்த தொடரில் நடிப்பது மற்றும் தனது கதாபாத்திரத்திற்கான அம்சம் குறித்து நிகழ்ச்சியொன்றில் பேசிய சமந்தா, 'தி ஃபேமிலி மேன் என்ற தொடரை நான் நடிப்பதன் மூலம் இந்தியில் எனது முதல் அடியை எடுத்துவைத்திருக்கிறேன். இந்த தொடரில் நான் ஒரு அங்கம் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தி பேமிலி மேன் 2 குழுவினருடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த ஆர்வமாக உள்ளது. இதற்காக காத்திருக்க முடியவில்லை. எப்போது வெளியாகும் என்ற ஆவலுடன் இருக்கிறேன்' என தெரிவித்திருக்கிறார்.
தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. மேலும், இந்த வெப் சீரிஸ் 2020 இறுதியில் வெளியாகும் என படக்குழுவின் மிக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், தெலுங்கு திரையுலகில் இருந்து இந்தியில் தடம்பதிக்கும் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யா அக்கினேனியை கடந்த 2017ஆம் ஆண்டு மணந்தார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து அவர் நடித்துவருகிறார். சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓ பேபி திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும், 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.