60 வயதான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசியலில் இணைய போகிறார். அவர் ராஷ்ட்ரிய சமாஜ் பக்சா எனும் கட்சியில் செப்டம்பர் 25ஆம் தேதியன்று இணையவுள்ளார் என அக்கட்சித் தலைவர் மஹாதேவ் ஜனகர் நேற்று தெரிவித்தார்.
ராஷ்ட்ரிய சமாஜ் பக்சா கட்சியானது, 2014 மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரு முக்கியப் பங்கை வகித்தது. தேர்தலில் போட்டியிட்ட ஆறு வேட்பாளர்களில், ஒரே ஒருவர் மட்டும் ராஷ்ட்ரிய சமாஜ் பக்சா கட்சி சார்பாக வெற்றி பெற்றார்.
கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், லக்னோ தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பாக நடிகர் சஞ்சய் தத் களமிறங்கினார். ஆனால் அப்போது அவர் மீது, படைகலச் சட்ட வழக்கு பாய்ந்திருந்ததால் தேர்தலில் இருந்து விலகினார். இப்போது 10 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் அவர் அரசியலில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இதுகுறித்து விளக்கமளித்துள்ள சஞ்சய் தத், " தான் எந்த கட்சியிலும் இணையப்போவது இல்லை, மஹாதேவ் ஜனகர் தன்னுடைய நல்ல நண்பர். அவரது எதிர்காலம் சிறக்கவே தான் விரும்புகிறேன்" என்றும் கூறியுள்ளார்.