இந்திய கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனியின் வாழ்க்கை கதையை சொல்லும் 'எம் எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக நடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங். இப்படத்தில் நடித்ததன் மூலமாக இவர் மிகப் பிரபலமானார்.
இந்நிலையில், கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி சுஷாந்த் சிங் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இவரின் இந்த மரணம் திரைப் பிரபலங்கள், ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுஷந்த் சிங்கின் மரணத்துக்கு பாலிவுட்டில் நிகழும் வாரிசு அரசியல் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பின் போதைப்பொருட்களுக்கு அடிமையானதது தான் சுஷந்தின் மரணத்திற்கு காரணம் எனவும் பேசப்பட்டது. மேலும் இவரது மரண வழக்கை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, அமலாக்கத்துறை, சிபிஐ என இந்தியாவின் முக்கியத்துறைகள் விசாரணை மேற்கொண்டது. இதன் காரணமாக சுஷாந்தின் தோழியான ரியா சக்ரவர்த்தியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது சுஷாந்த் சிங் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் முதலமாண்டு நினைவு தினமான இன்று பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது சமூகவலைதளங்களில் சுஷாந்த் குறித்த பதிவுகளையும் புகைப்படங்களையும் பதிவிட்டு தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில். சுஷாந்த் சிங்கின் தோழியும் நடிகையுமான ரியா தனது சமூகவலைதளப்பக்கத்தில், " சுஷாந்த் நீ இப்போது இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. நேரம் எல்லாவற்றையும் குணப்படுத்தும் என்பார்கள். ஆனால் எனக்கு எல்லாமும் நீதான். எனது பாதுகாவலும் நீதான். இப்போது வானத்திலிருந்து என்னை பாதுகாத்து வருகிறாய் என எனக்குத் தெரியும்.
நான் உன்னை எல்லா இடங்களிலும் தேடுகிறேன். நீ என்னுடன் என்னுள் இருக்கிறாய். நீ என்னை வந்து அழைத்து செல்வாய் என ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன். சுஷாந்த் நீ இங்கே இல்லை என நினைக்கும் ஒவ்வொரு முறையும் அதன் உணர்வு என் இதயத்தில் வலியை ஏற்படுத்துகிறது. நீ இல்லாமல் என் வாழ்க்கை இல்லை. என் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்து அதை திரும்ப நீயே எடுத்துக்கொண்டாய்.
இந்த வெற்றிடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. உனக்காக இந்த உலகில் உள்ள குவாண்டம் இயற்பியல் புத்தகங்களை படிக்கிறேன். தயவு செய்து என்னிடம் திரும்பி வா சுஷாந்த்" என பதிவிட்டுள்ளார்.