இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக மும்பை மாநகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
நடிகர், நடிகைகள் வீடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுவருகிறது. நேற்று பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ளது ரேகாவின் சீ ஸ்பிரிங்ஸ் பங்களா. இந்த பங்களாவில் பணியாற்றிவந்த இரண்டு காவலர்களில் ஒருவருக்கு சமீபத்தில் கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மும்பை மாநகராட்சி நிர்வாகம் அவரது பங்களாவுக்கு சீல் வைத்து, அப்பகுதியைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையின் படி, நோய்த்தொற்று உறுதியான ஒருவருடன் நம் தொடர்பில் இருந்தால் நாமும் கட்டாயமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் இதுவரை ரேகா பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாது சீல் வைக்கப்பட்ட தனது பங்களாவிற்கு மும்பை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிக்கும் அவர் அனுமதியளிக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாகவே, ரேகா எவருடனும் தொடர்பு கொள்ளாமல் வீட்டில் தனிமையாக இருந்து வருவதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.