பாலிவுட்டில் தற்போதைய சென்சேஷனல் ஜோடி ரன்பீர் கபூர் - ஆலியா பட். இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வரும் நிலையில், இவர்கள் எப்போது தங்களது திருமணம் குறித்து அறிவிப்பார்கள் என ஒட்டுமொத்த பாலிவுட் உலகும் எதிர்நோக்கிக் காத்துள்ளது.
இந்த ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், ரன்பீர் - ஆலியா ஜோடிக்கு ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்போரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. முன்னதாக நேற்று (டிச.29) ரன்பீர், அவரது தாய் நீது கபூர். அவரது சகோதரி ரித்திமா கபூர், ஆலியா ஆகியோர் ஜெய்ப்பூருக்கு சென்றடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரன்பீரின் மொத்த குடும்பமும் ஜெய்ப்பூர் சென்றதையடுத்தே இந்தச் செய்தி வெளிவரத் தொடங்கியுள்ளது.
ரன்பீரின் முன்னாள் காதலியும், பிரபல நடிகையுமான தீபிகா படுகோன், அவரது கணவர் ரன்வீர் சிங் ஆகியோரும் ஜெய்ப்பூர் சென்றுள்ள நிலையில், ரன்பீர், ரன்வீர் இருவருடனும் நீது கபூர் முன்னதாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த செல்ஃபி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ரன்பீர் - ஆலியா இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.