நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் நடிகை ரியா சக்ரவர்த்தியிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், முன்னதாக அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு, வருகிற 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அவரை வைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ரியா அளித்த வாக்குமூலத்தின்படி கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங், நடிகர் சயிஃப் அலி கானின் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான சாரா அலி கான், ஆடை வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா ஆகியோர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்களின் தீவிர கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மூவரும் தன்னுடனும், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உடனும் போதைப்பொருள்கள் உட்கொண்டதாகவும் ரியா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக, 80 விழுக்காடு பாலிவுட் நட்சத்திரங்கள் போதைப் பொருள் உட்கொள்வதாக ரியா தெரிவித்த நிலையில், பாலிவுட்டின் 25 பிரபல நட்சத்திரங்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மற்றொரு அறிக்கையில், வாரிசு நடிகர்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் பிரபல தயாரிப்பாளர், நிழல் உலகைச் சேர்ந்த நபர்களிடமிருந்து பணம் பெற்று இதில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!