கரிஷ்மா தேவ் துபே எழுதி இயக்கியுள்ள குறும்படம் 'பிட்டு' (Bittu). இந்தப் படமானது ஆஸ்கர் விருதில் குறும்படப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் உத்தரகாண்டைச் சேர்ந்த ராணி, ரேணு குமாரி என்னும் இரண்டு சிறுமிகள் மிகச் சிறப்பாக நடித்து உலக முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளனர். இதில் பெண் கல்வி குறித்தும் கல்வியின் நிலைகள் குறித்தும் இந்தப் படத்தில் இயக்குநர் கூறியுள்ளார்.
தற்போது இந்தப் படத்தை பார்த்த ஏக்தா கபூர், குணீத் மோங்கா, தஹிரா காஷ்யப் குர்ரானா, ருச்சிகா கபூர் ஷேக் ஆகியோரால் நிறுவப்பட்ட 'இந்தியன் வுமன் ரைசிங்' என்ற நிறுவனம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி, பின் தங்கிய பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்படவுள்ளது. இந்த நிதி திரட்டலில் சஃபீனா ஹுசைன் என்பவரால் நிறுவப்பட்ட 'எஜுகேட் கேர்ள்ஸ் யுஎஸ்ஏ' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்துள்ளது.
இந்நிலையில், யுனிசெஃப் நல்லெண்ணத் தூதர் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இப்படத்திற்கு தனது ஆதரவு கரத்தை நீட்டியுள்ளார். இதுகுறித்து வீடியோ கால் மூலம் படத்தின் இயக்குநர் கரிஷ்மா தேவ் துபே, ராணி, ரேணு குமாரி ஆகியோருடன் பிரியங்கா சோப்ரா உரையாடினார். அப்போது தனது நகைச்சுவை உணர்வால் சிறுமிகளை பிரியங்கா சிரிக்கவைத்துக்கொண்டே இருந்தார். மேலும் இயக்குநரிடம் இந்தப் படத்தின் அனுபவம் குறித்து கேட்டறிந்தார். இந்தப் படத்தின் மூலம் நிதி திரட்டும் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். மேலும் இரண்டு சிறுமிகளையும் விரைவில் நேரில் சந்திப்பதாகவும் அவர் கூறினார்.